தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி குறித்து மூத்ஹ காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசியதாக சொல்லப்படுவது வெறும் வதந்திதான் என்று தவெகவின் இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக மதுரையில் இன்று தவெகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார் என்பது போன்ற புரளிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது; அந்த மாதிரி இருந்தால் பொதுவெளியில் கண்டிப்பாக அறிவிப்புகள் வரும்.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இதேபோல வதந்திகள் பரப்பப்படுகின்றன. எங்களது கொள்கை எதிரி பாஜகதான் என சொல்லிவிட்டோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இடம் பெறுவதற்கு 1% கூட வாய்ப்பு இல்லை.
நடிகர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே தவெக கூட்டணி அமைக்கும்.
கரூரில் 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சிடிடிவி, போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் நாங்கள் கொடுத்துள்ளோம் என்றார்.
