பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கோவை வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அக்கட்சியினர் இன்று (ஏப்ரல் 26) உற்சாக வரவேற்பு அளித்தனர். tvk cadres welcome vijay
கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டிக் கூட்டம் இன்றும் நாளையும் (ஏப்ரல் 26, 27) நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 8,000 பேர் கலந்து கொள்கின்றனர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 8,000 பேர் நாளை கலந்து கொள்ள உள்ளனர்.

பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார் விஜய்.
அவரை வரவேற்பதற்காக விமான நிலையம் முன்பாக தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியே வரும்போது, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பயணிகள் பாதிப்படைந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து சித்ரா சிக்னல் வரை பிரச்சார வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி விஜய் சென்றார். அவருக்கு மேள தாளங்கள் முழங்க, பூக்கள் தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது, விஜய் சென்ற வேன் மீது ரசிகர்கள் சிலர் ஏறினர். அவர்கள் விஜய்யை கையெடுத்து கும்பிட்டு கன்னத்தை கிள்ளி முத்தமிட்டனர். அவர்களுக்கு விஜய் தன்னிடமிருந்த கட்சி துண்டை அணிவித்தார். உடனடியாக அவர்களை வேனில் இருந்து பாதுகாவலர் வெளியேற்றினார்.
ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு விஜய் சென்றடைந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலையில் பூத் கமிட்டி கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பூத் கமிட்டி கூட்டம் நடைபெறும் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியை சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கட்சி ஆரம்பித்த பிறகு முதல்முறையாக கொங்கு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.