செங்கோட்டையன் போன்ற மூத்த நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது ‘கொள்ளிக்கட்டையால் தலையை சொறிவதற்கு சமம்’ என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்திருக்கிறது. இன்று காலை ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிலையில் மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
”செங்கோட்டையன் 1972 முதல் அதிமுகவில் இருந்து வருகிறார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் ரீதியானது கிடையாது. 10 நாளுக்கு முன்னதாக பசும்பொன்னுக்கு வருகிறேன் என்று சொன்னபோது, சரி வாருங்கள் என அழைப்பு விடுத்தோம்.
முன்னதாக அம்மா இருக்கும் போது அவர் பசும்பொன்னுக்கு வந்தால் செங்கோட்டையன் முன்கூட்டியே பாதுகாப்பு பணிகளை பார்வையிட வருவார். ஜெயலலிதாவின் சுற்று பயணங்களின் போது பம்பரமாக வேலை செய்பவர் செங்கோட்டையன்” என்றார்.
செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கும் தகுதி பழனிசாமிக்கு இல்லை என்று கூறிய டிடிவி தினகரன், இரட்டை இலை இல்லை என்றாலும் பரவாயில்லை என கங்காரு போல பதவியை பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையனை போன்ற மூத்த நிர்வாகியை நீக்கியது கொள்ளிக் கட்டையால் தலையை சொறிவதற்கு சமம்.
யாரையும் துரோகி என்று சொல்வதற்கு எடப்பாடிக்கு தகுதியில்லை. கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்டிருக்கிறார். குரங்கு கையில் பூமாலை சிக்கி கொண்டது போல இப்போது எடப்பாடி கையில் அதிமுக உள்ளது.
2021ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். ஹிட்லரை போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 2026 தேர்தலில் தென்மாவட்ட மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
