அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதும் காப்பாற்றியதும் பாஜக அல்ல; கூவத்தூர் ரிசார்ட்டும் அதிமுகவின் 122 எம்.எல்.ஏக்களும்தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக; அந்த நன்றி கடனுக்காகவே அதிமுக கூட்டணி வைத்துள்ளது என்றார். மேலும் 18 எம்.எல்.ஏக்களை கடத்திக் கொண்டு போய் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சித்ததாக டிடிவி தினகரனையும் மறைமுகமாக சாடினார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு மறுப்பு தெரிவித்து இன்று கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியதாவது:
அதிமுகவை உருவாக்கியவர் எம்ஜிஆர். இந்த கட்சியின் உயிரோட்டம், நியூக்ளியஸே அவர் உருவாக்கிய சட்ட திட்டங்கள்தான்.
அந்த சட்டங்களை மாற்றி, அதை தங்களுக்கு ஏற்ப மாற்றி- யாரும் போட்டியிட முடியாத வகையில் எடப்பாடி பழனிசாமி செய்ததுதான் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து வெளியேறியதற்கு காரணம்.
எம்ஜிஆர் காலத்தில், யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம்; அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் தேர்ந்தெடுப்பவரே பொதுச்செயலாளர் என இருந்தது.
ஆனால் இதனை மாற்றி, பொதுச்செயலாளர் பதவியில் போட்டியிட இத்தனை மாவட்ட செயலாளர் ஆதரவு தேவை என யாருமே போட்டியிடாத நிலையை உருவாக்கியது எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல்.
2017-ம் ஆண்டிலேயே, எதற்காக எங்களை வெளியேற்றினார்கள்? ஆட்சியை முறையாக நடத்த வேண்டும்; ஜெயலலிதாவின் வழியில் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னோம்.. ஆனால் டெல்லியின் பெயரை சொல்லி எங்களை வெளியேற்றினார்கள்.
அதாவது அதிமுகவில் டிடிவி தினகரன் இருந்தால், எங்கள் ஆட்சியை டெல்லி பாஜக அரசு தொடர விடாது என அன்று சொன்னவர் இந்த எடப்பாடி பழனிசாமிதான்.
காலம் இப்போது எப்படி மாறி இருக்கிறது.. எடப்பாடி பழனிசாமியை நீக்கினால்தான் பாஜக கூட்டணிக்கோ அல்லது அதிமுகவில் அமமுக இணையும் என்ற நிலைமை உருவாகி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் இல்லை என்று சொன்னால்தான், பாஜக கூட்டணிக்கு வர முடியும்.
தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியால் முதல்வராக முடியவில்லை. அன்று எடப்பாடி பழனிசாமி முதல்வரானது கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட 122 அதிமுக எம்.எல்.ஏக்களால்தான். கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்து முதல்வரானவர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியது பாஜக அல்ல. அவரை அன்று காப்பாற்றியது அதிமுகவின் 122 எம்.எல்.ஏக்கள்தான். எடப்பாடி பழனிசாமி அப்பட்டமாக பொய் பேசுகிறார். அவரது பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது. நன்றிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் பொய்மூட்டை பழனிசாமி. துரோகம் செய்வதைத் தவிர வேறு எதுவுமே தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை அன்று காப்பாற்றிய 18 எம்.எல்.ஏக்களை பின்னர் தகுதி நீக்கம் செய்தவரே அவர்தான்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல.. 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னவரே எடப்பாடி பழனிசாமி.
செங்கோட்டையனை யாருடைய கை கூலி என்று விமர்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி?
தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமியை உறுதியாக புறக்கணிப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 20%-ல் இருந்து 10% ஆகவே குறையும். 2026 சட்டமன்ற தேர்தலில் 4 கூட்டணிகள் போட்டியிடும்; இந்த முறை எடப்பாடி பழனிசாமி தோற்றுப் போவார்; அதற்கு நாங்கள் காரணம் இல்லை.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.