‘தன்மானத்தை இம்மியளவும் விட்டு தர முடியாது’.. அமித்ஷாவிடம் எடப்பாடி சொல்லப் போவது என்ன?

Published On:

| By Mathi

AIADMK EPS Amit Shah

அதிமுகவின் தன்மானத்தை இம்மியளவும் விட்டுத் தர முடியாது என சென்னை பொதுக் கூட்டத்தில் பேசிய கையோடு, மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்தாலும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெள்ளத் தெளிவான நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமியின் இந்த நிலைப்பாட்டை நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.

  • அதிமுகவில் அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகளும் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்க்க விரும்பவில்லை என்பது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த ரிப்போர்ட்.
  • சசிகலா, டிடிவி தினகரன் குடும்பம் மீண்டும் அதிமுகவுக்குள் வந்தால் கட்சி பதவி முதல் அனைத்தும் பறிபோகும்; எதுவும் அதிமுகவில் நிரந்தரம் இல்லாமல் போய்விடும்; உழைப்புக்கு இப்போது கிடைக்கும் மரியாதை இல்லாமல் போகும் என்கிற அச்சம் அதிமுக தொண்டர்களிடம் இருப்பதாக அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளது.
  • அதேபோல, தங்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்டவற்றை கடந்த காலங்களைப் போலவே சசிகலா குடும்பம் பறித்து கொள்ளும் என்கிற அச்சம் அதிமுகவின் மூத்த தலைவர்களிடம் இருக்கிறது.
  • இதனால்தான் எடப்பாடி பழனிசாமி, பிரிந்தவர்களை மீண்டும் ஒன்று சேர்க்கவே முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்
  • “அதிமுகவினரிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக தலைவர்கள் கட்சி; அதிமுக தொண்டர்களின் கட்சி. அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளுக்கே ஆதரவு தராதவர்கள்; தொண்டர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என முடிவு எடுத்துவிட்டால் அதில் உறுதியாக நிற்பார்கள். எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா; ஜெயலலிதாவுக்கு பின் எனக்கு என தொண்டர்கள் ஆதரவு தருகின்றனர். இதை பாஜக மேலிடம் புரிந்து கொள்ளவே இல்லை” என தமக்கு நெருக்கமான சகாக்களிடமும் டெல்லி மேலிடத்துக்கும் ஏற்கனவே தகவல் அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் நாம் மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.
  • நாம் எழுதிய அனைத்தையும் உறுதி செய்யும் வகையில், சென்னை பொதுக் கூட்டத்தில், டிடிவி தினகரன் – ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி
  • அதேபோல பாஜக அன்று அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது; நன்றி கடனுக்காக கூட்டணி வைத்துள்ளோம்; அமித்ஷாவை சந்தித்தாலும், ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானத்தை இம்மியளவும் விட்டு தரமாட்டோம் என ஆணித்தரமாக பேசிவிட்டு டெல்லி சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
  • டெல்லி செல்வதற்கு முன்னரே தமது நிலைப்பாடு இதுதான்.. இதை டெல்லி பாஜக மேலிடம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதாக அதிமுக மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றன.
  • டெல்லியில் இன்று அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன்- ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது; அப்படி சேர்த்தாலும் என் தலைமையை பலவீனமாக்க வேண்டும் என்ற சதித் திட்டத்துடன் அவர்கள், பாஜக- அதிமுக கூட்டணிக்கு எதிராகவே தேர்தலில் வேலை செய்வர்; அதிமுக தொண்டர்களும் டிடிவி தினகரன்- ஓபிஎஸ்-சசிகலாவை ஏற்கவில்லை; இவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்த்தால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டு தொண்டர்கள் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கிவிடுவர் என்கிற தமது நிலைப்பாட்டை அழுத்தமாக சொல்ல வாய்ப்புள்ளது.
  • அதிமுகவின் இத்தனை குழப்பத்துக்கும் காரணமே தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைதான்; அவர்தான் இத்தனையையும் தூண்டிவிடுகிறார் என்ற குற்றச்சாட்டுடன், அண்ணாமலை மீதான பெரிய புகார்கள் பட்டியலையும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கொடுக்க இருப்பதாகவும் நாம் நமது மின்னம்பலத்தில் நேற்று பதிவு செய்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share