“அதிமுகவை சிலர் அடகு வைக்கப் பார்க்கிறார்கள்; அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நடுரோட்டில்தான் நிற்பார்கள்.. ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம்.. அதில் இம்மியளவு கூட விட்டுக் கொடுக்கமாட்டேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
துரோகம் செய்தால் நடுரோடுதான்
சென்னை வடபழனியில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 15) பேசியதாவது: உயிரோட்டம் உள்ள அதிமுகவுக்கு துரோகம் செய்கிறவர்கள் யாராலும் இருந்தாலும் ஆண்டவன் மன்னிக்கமாட்டான். அதிமுகவுக்கு துரோகம் செய்தால் நடுரோட்டில்தான் நிற்பார்கள்.
தன்மானத்தை இம்மிளவும் விட முடியாது
டெல்லி பயணம், மழை முன்னெச்சரிக்கையால் மாற்றப்பட்டது. ஆனால் அமித்ஷாவை சந்திக்கிறேன் என்கின்றனர்..எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சரை (அமித்ஷாவை) சந்திக்கிறார் .. உட்கட்சி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்கின்றன பத்திரிகைகள்.. பத்திரிகையாளர்களே! அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரம் என்பதைவிட தன்மானம்தான் முக்கியம். அதில் ஒரு இம்மியளவு கூட விட்டுக் கொடுக்கமாட்டேன்.
சில கைக்கூலிகள்
சிலபேரை கைக்கூலியாக வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கீங்க.. அந்த கைக்கூலிகள் யாரென்று அடையாளம் காட்டி இருக்கிறோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்.
ஓபிஎஸ் மீது பகிரங்க அட்டாக்
சில பேர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தார்கள். அவர்களை மன்னித்து துணை முதலமைச்சர் பதவியை கொடுத்தோம். ஆனால் மீண்டும் திருந்தவில்லை. புனிதமாக, கோவிலாக கருதுகிற அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்.. அவர்களை எல்லாம் கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டுமா?
எம்.எல்.ஏக்களை கடத்திய தினகரன்
அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை கடத்திக் கொண்டு போனார்களே (டிடிவி தினகரன்) அவர்களை எல்லாம் அதிமுகவில் சேர்க்க வேண்டுமா?
பாஜகவுடன் கூட்டணி ஏன் தெரியுமா?
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை சிலர் கபளீகரம் செய்ய பார்த்தார்கள். சிலர் கட்சியை கவலைக்கிடமாக்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தனர். அப்போது கட்சியை ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்தவர்கள் மத்தியில் இருப்பவர்கள். பாஜக ஆட்சியில் எந்த தொந்தரவும் தரவில்லை. நாம் கேட்ட நிதியை தந்தார்கள்.. திட்டத்தை தந்தார்கள்.. நன்றி மறப்பது நன்றல்ல என்பதற்கேற்ப அன்று அதிமுகவை பாஜக காப்பாற்றியது. அந்த நன்றி கடனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
அடகு வைக்கப் பார்க்கிறார்கள்
அதிமுகவில் வெட்டிப் பேச்சு பேசுவர்களுக்கு இடம் இல்லை. அதிமுகவில் உழைப்பவர்களுக்குதான் இடம். அதிமுகவை சிலர் அடகு வைக்கப் பார்க்கிறார்கள். அனைவரும் துணிந்து நின்று எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
