வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இன்று (ஏப்ரல் 23) இறங்கினார் கள்ளழகர்.
மதுரை உள்ளூர் விடுமுறை!
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
பாபா ராம்தேவ் வழக்கு விசாரணை!
ஆங்கில மருத்துவம் பற்றி பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பர சர்ச்சை தொடர்பாக பாபா ராம்தேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது.
உலகப் புத்தக தினம்!
அறிவுசார் சொத்துகளான புத்தகங்களைப் பாதுகாக்கும் வகையில் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது.
மின்னம்பலம் தமிழின் ’சந்திப்போமா?’
உலக புத்தக நாளை முன்னிட்டு மின்னம்பலம் தமிழின் ’சந்திப்போமா?’ நிகழ்வு, 10 இலக்கிய ஆளுமைகளுடன் இன்று மாலை 5 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள படைப்பு அரங்கத்தில் நடைபெறுகிறது.
சேப்பாக்கில் சென்னை – லக்னோ மோதல்!
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
கல்வியாண்டு நிறைவு!
நடப்பு கல்வியாண்டின் கடைசி நாளான இன்று தேர்வுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
அண்ணாமலை பிரச்சாரம்!
தட்சிண கன்னடா மக்களவை பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் செய்கிறார்.
திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!
சித்திரை மாதப் பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்றும் நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 37வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.