“காக்கிச் சட்டை போடணும்… தோளில் இரண்டு நட்சத்திரம் மின்னுவதைப் பார்க்கணும்” என்ற கனவோடு இரவும் பகலும் கண்விழித்துப் படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, அந்தப் பரீட்சை நாள் நெருங்கிவிட்டது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணிக்கான எழுத்துத் தேர்வு குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன.
படித்து முடித்துவிட்டுத் தேர்வு மையத்திற்குச் செல்லும் அவசரத்தில், சின்னச் சின்னத் தவறுகளால் வாழ்க்கைக் கனவைத் தொலைத்துவிடக் கூடாது. அதற்காகவே போர்டு வெளியிட்டிருக்கும் ‘வார்னிங்’ லிஸ்ட் இதோ!
நேரம் ரொம்ப முக்கியம் பாஸ்!
தேர்வர்கள் எப்போது வர வேண்டும் என்பதில் இம்முறை கெடுபிடி அதிகம்.
- ரிப்போர்ட்டிங் டைம்: காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்குகிறது என்றாலும், தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்குள் ஆஜராகிவிட வேண்டும்.
- கேட் குளோஸ்: சரியாக 10 மணிக்குத் தேர்வு மையத்தின் கதவுகள் மூடப்படும். “ஒரு நிமிஷம் லேட்” என்று கெஞ்சினாலும் உள்ளே அனுமதி கிடையாது.
கையில் என்ன கொண்டு போகலாம்?
தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் பொருட்கள் லிஸ்ட் ரொம்பச் சின்னதுதான்.
- ஹால் டிக்கெட்: இணையதளத்தில் டவுன்லோட் செய்த ஹால் டிக்கெட் (Hall Ticket).
- அடையாள அட்டை: ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு அல்லது வாக்காளர் அட்டை – இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் (Original) கையில் இருக்க வேண்டும்.
- பேனா: ஓஎம்ஆர் (OMR) ஷீட்டில் விடையளிக்க, நீலம் அல்லது கறுப்பு நிற பால்பாயிண்ட் பேனா (Ballpoint Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜெல் பேனா, இங்க் பேனாவுக்கு ‘நோ என்ட்ரி’.
தடை செய்யப்பட்டவை எவை?
“டைம் பார்க்க வாட்ச் கட்டிக்கலாமா?” என்று கேட்டால், ‘கூடாது’ என்கிறது வாரியம்.
- செல்போன், கால்குலேட்டர், ப்ளூடூத் ஹெட்செட், ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch) மற்றும் டிஜிட்டல் சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கையில் சாதாரண அனலாக் வாட்ச் கூடக் கட்டிக்கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்வு அறையிலேயே மணி (Bell) அடிக்கப்படும்.
பயோமெட்ரிக் செக்கிங்:
தேர்வர்கள் அனைவருக்கும் தேர்வு மையத்தில் பயோமெட்ரிக் (கைரேகை) பதிவு மற்றும் ஃபேஸ் ரெகக்னிஷன் (Face Recognition) முறை மூலம் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கச் சோதனை நடத்தப்படும். எனவே, கைகளில் மெஹந்தி, மை போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
சென்டருக்குப் போயிட்டு பேனாவை மறந்தாச்சு, ஐடி கார்டை மறந்தாச்சுனு பதட்டப்படாதீங்க. முந்தின நாள் இரவே எல்லாவற்றையும் எடுத்து பையில் வைத்துவிடுங்கள். ஹால் டிக்கெட்டில் உள்ள தேர்வு மையத்தை கூகுள் மேப்பில் முன்கூட்டியே செக் பண்ணிடுங்க. காக்கி கனவு நனவாக வாழ்த்துகள்!
