தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 5 செ.மீ மழையும் குறைந்தபட்சமாக கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர் பகுதிகளில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 33.5° செல்சியஸும் ஈரோட்டில் 17.2° செல்சியஸும் பதிவானது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில் “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 04-12-2024 மற்றும் 05-12-2024, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06-12-2024 முதல் 10-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அரபிக்கடல் பகுதிகள்
04-12-2024: லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05-12-2024: தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.” என்று கூறப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
புயல் பாதிப்பு… அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பா? அன்பில் மகேஷ் பதில்!
மகாராஷ்டிரா: பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு!