2025ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என்பதால், பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது.
அதேவேளையில் பணி நிமித்தமாக வெளியூர்களில் வசிப்போர், தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்புவதற்கு வசதியாக தீபாவளி பண்டிகை முடிந்த அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டும் அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமையை விடுமுறையாகவும், அக்டோபர் 22ஆம் தேதி ஈடு செய்யும் விதமாக அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு நீண்ட ஓய்வையும், பண்டிகையை முழுமையாக கொண்டாட ஒரு வாய்ப்பையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.