ATM Franchise வைத்து தருவதாக கூறி கோவையில் நூதன முறையில் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனத்தின் திறப்பு விழாவில் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றதைப் பார்த்ததால் ஏமார்ந்து விட்டோம் என கோவை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை நவஇந்தியா பகுதியில் துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி, தமிழ்மணி ஆகியோர் Zpe எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் White Label ATM Franchise குறித்து சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளனர்.
இதில் ஆர்வம் உள்ளவர்களை கோவை அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள IZET E-PAYMENT PVT LTD நிறுவனத்திற்கு அழைத்துள்ளனர். அங்கு வைத்து நாங்கள் ATM இயந்திரங்களை Franchise ஆக வைக்க கொடுத்து விடுவோம். அந்த இந்திரத்தில் வங்கிகளின் ATM கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கலாம், ஜிபே போன்றவற்றின் மூலமும் பணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு பணமாக எடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
மேலும் முதலீடுக்கு தகுந்தாற்போல் தங்களிடம் பல ஸ்கீம்கள் உள்ளதாகவும், முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப உங்களுக்கு வருமானமும், கமிஷனும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
பணம் செலுத்திய பின் 45 நாட்களில் இயந்திரங்கள் ஒப்படைக்கப்படும். நாங்களே பணத்தை வைத்து விடுவோம். பின்னர் மாதம் தோறும் கமிஷன் வழங்கப்படும் என்றனர்.
இதை நம்பி பலரும் தங்களால் இயன்ற வரை லட்சக்கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை ஒட்டு மொத்தமாக ரூ.2 கோடியே 81 லட்சத்து 55,000 வரை முதலீடு செய்துள்ளனர்.
இதில் முதல்கட்டமாக சிலருக்கு ஏடிஎம் இயந்திரங்களையும் கொடுத்துள்ளனர். ஆனால் அது சில வாரங்கள் மட்டுமே வேலை செய்துள்ளன. பின்னர் பணம் நிரப்ப ஆட்கள் வரவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது அப்டேட் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதைபோல் பணம் செலுத்திய பலருக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் வழங்கப்படவில்லை.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த 76 பேர் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் பிரமுகர்கள் கலந்து கொண்டதை நம்பியே நாங்கள் பணத்தை முதலீடு செய்தோம்.45 நாட்களில் ஏடிஎம் மெஷின் வைத்து தருவோம் என்று தெரிவித்த நிலையில் இரண்டாடுகளாக இழுத்தடிக்கப்படுகிறோம். அவர்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அப்படி தொடர்பு கொள்ளும் போது மிரட்டல் தொனியில் பேசுகின்றனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
