தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக் கழகங்கள் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் மீது நாளை (அக்டோபர் 17) விசாரணை நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழக துணைவேந்தரை நீக்கும்/ நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வகை செய்வதற்கான மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குகள் தொடர்ந்திருந்தது. இந்த வழக்குகளின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை (அக்டோபர் 17) நடைபெற உள்ளது.
கலைஞர் பல்கலைக் கழக மசோதா
கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் அமைக்க வகை செய்யும் சட்ட மசோதா, தமிழக சட்டமன்றத்தில் 2024-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு 3 மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக் கழகம்
தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிப்பது மற்றும் நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 29-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு மே 5-ம் தேதி அனுப்பி வைத்தது. இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஜூலை 14-ந் தேதி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். ஆளுநரின் இந்த முடிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளின் விசாரணை நாளை நடைபெற உள்ளது.