தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தொகுதிகளில் கட்சிகள் வித்தியாசமின்றி ‘கலக குரல்கள்’ களைகட்டிக் கொண்டிருக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, தமிழக அரசியலில் சென்டிமென்ட் தொகுதியாக பார்க்கப்படுகிறது. வேடசந்தூர் தொகுதியில் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ அந்த கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பதுதான் கடந்த பல தேர்தல்களாக இருந்து வரும் சென்டிமெண்ட்.
வேடசந்தூர் தொகுதியில் தற்போது திமுக எம்.எல்.ஏ.வாக காந்திராஜன் இருந்து வருகிறார். அண்மையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில், காந்திராஜன் விழுந்ததால் பெரும் அதிருப்தியை எதிர்கொண்டிருக்கிறார்.
வேடசந்தூர் தொகுதியில் காந்திராஜனுக்கு இந்த முறை திமுக தலைமை போட்டியிட வாய்ப்பு தராது என கூறப்படுகிறது. இதனால் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நமது மின்னம்பலத்தில் பதிவிட்டிருந்தோம். இது வேடசந்தூர் தொகுதியில் பெரும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த செப்டம்பர் 25-ந் தேதி வேடசந்தூர் தொகுதியில் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரக் கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டிருந்தனர். இது எடப்பாடி பழனிசாமிக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்திருந்தது.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் வேடசந்தூர் விசிட்டுக்குப் பின் அதிமுகவில் திடீரென ‘கலகம்’ வெடித்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அதிமுகவின் சீனியர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆளுக்கு ஒரு திசையில் கோஷ்டிகளாக வலம் வருகின்றனர். தற்போது நத்தம் விஸ்வநாதன் கோஷ்டியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமி ஆதரவாளர்கள் தனி ஆவர்த்தனத்தை பகிரங்கமாக காட்டி வருவது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றி நம்மிடம் பேசிய அதிமுக மூத்த நிர்வாகிகள், இவ்வளவு நாள் இல்லாமல் திடீரென சமூக வலைதளங்களில் தற்போது திடீரென முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமிக்கு ஆதரவாக எழுத தொடங்கி இருக்கின்றனர். அது அவர்களது உரிமை. அதற்காக அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்துக்கு பின்னர் வேடசந்தூரில் 2016-க்கு பின்னர் அதிமுகவே இல்லை; அதிமுகவால் எந்த நன்மையுமே கிடைக்கவில்லை என்பதைப் போல பதிவிட்டு வருவது எப்படி நியாயம்? இதை பழனிசாமி தடுத்திருக்க வேண்டாமா? வேடசந்தூரில் பேசிய பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிசாமி), தமிழகத்திலேயே அம்மா கிளினிக்குள் அதிகமாக திறக்கப்பட்டது வேடசந்தூர் தொகுதியில்தான் என பாராட்டுகிறார்; மாயனூர் அணையில் இருந்து வேடசந்தூருக்கு காவிரி குடிநீரை கொண்டு வரும் திட்டம் பற்றி பேசினார்.. இப்படி எத்தனையோ திட்டங்களை 2016-2021-ல் டாக்டர் பரமசிவமும் கொண்டு வந்திருக்கிறார்.. அதை எல்லாம் சொல்லாமல் 2016-க்குப் பின்னர் அதிமுகவே தொகுதியில் இல்லை என பேசுவதும் எழுவதும் கலகம் ஏற்படுத்துவதாகாதா?” என குமுறுகின்றனர்.
வேடசந்தூர் தொகுதி அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் விபிபி பரமசிவம், தற்போது அதிமுகவின் மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருக்கிறார். கடந்த முறை எம்.எல்.ஏ.வாக இருந்த போது சட்டமன்றத்தில் ஆணித்தரமாக பல்வேறு விஷயங்களை முன்வைத்திருந்தார். திமுக பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டியில், “சட்டமன்றத்தில் வேடசந்தூர் அதிமுக எம்.எல்.ஏ. பரமசிவம் போன்ற இளைஞர்கள் சிறப்பாக பேசுகின்றனர்” என பாராட்டியிருந்தார். தற்போது பரமசிவம், அதிமுகவின் மாநில தலைமைக் கழக பொறுப்பாளர்களில் ஒருவர்; சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டிகளை சீரமைக்கும் பொறுப்பையும் எடப்பாடி பழனிசாமி, பரமசிவத்திடம் வழங்கி இருந்தார். இதனால் இந்த முறை, டாக்டர் விபிபி பரமசிவத்துக்குதான் அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
அதே நேரத்தில் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தமது சம்பந்தி ஜக்கையன் ஆகியோர் மூலமாக எப்படியாவது சீட் வாங்கிவிட முடியாதா? என தென்னம்பட்டி பழனிசாமியும் மல்லுக்கட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காகத்தான் இப்படி தனி ஆவர்த்தனத்தை திடீரென இறக்கிவிட்டிருக்கிறாராம் தென்னம்பட்டி பழனிசாமி.
டாக்டர் விபிபி பரமசிவமும் தென்னம்பட்டி பழனிசாமியும் ஒக்கலிகா கவுடா ஜாதியைச் சேர்ந்தவர்கள்; அதிமுகவைப் பொறுத்தவரை வேடசந்தூர் தொகுதியில் 1980-க்குப் பின்னர் ஒக்கலிகா கவுடா ஜாதியினருக்கு மட்டுமே வேட்பாளர் வாய்ப்பை கொடுத்து வருகிறது. இந்த முறை டாக்டர் விபிபி பரமசிவத்துக்கு உறுதியாக சீட் கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்தாலும் நாமும் ‘கல்லெறிந்துதான்’ பார்ப்போம் என்ற கோதாவில் தென்னம்பட்டி பழனிசாமி ஆதரவு தரப்பு ‘விளையாடுவது’ சரியானது அல்ல; தலைமைக் கழகத்தில் புகார் செய்வோம் என்கின்றனர் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
வேடசந்தூர் அதிமுக வேட்பாளர்கள்
1980, 1984 வி.பி.பாலசுப்பிரமணியம், 1991, 1996-ல் காந்திராஜன், 2001-ல் ஆண்டிவேல், 2006-ல் தென்னம்பட்டி பழனிசாமி, 2011, 2016-ல் டாக்டர் விபிபி பரமசிவம் என அதிமுக ஒவ்வொரு தேர்தலிலும் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவருமே ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்தவர்கள்.
வேடசந்தூர் தொகுதியும் ஆட்சி சென்டிமெண்ட்டும்
வேடசந்தூர் தொகுதியில் 1980,84-ல் அதிமுக வென்ற போது அதிமுக ஆட்சி அமைந்தது.
1989-ல் திமுக வென்றது- அப்போது திமுக ஆட்சி அமைந்தது.
1991-ல் அதிமுக; 1996-ல் திமுக; 2001-ல் அதிமுக, 2006-ல் திமுக கூட்டணியில் காங்கிரஸ்; 2011,2016-ல் அதிமுக, 2021-ல் திமுக வென்றது. இதனடிப்படையில்தான் வேடசந்தூர் தொகுதியில் எந்த கட்சி ஜெயிக்கிறதோ அந்த கட்சி ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்கிற சென்டிமெண்ட் இருக்கிறது
