வைஃபை ஆன் செய்ததும், “வருவார்.. வந்துவிடுவார்.. வந்து கொண்டே இருக்கிறார்” என்கிற ரேஞ்சில்தான் எல்லாம் போகிறது என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா வரும் போது ‘வறுவல்’ வாடை அதிகமாக இருக்குதே..
ஆமாம்யா.. சட்டசபையில் நேற்று கரூர் சம்பவத்துல சிஎம் பேசினதை பார்த்தீரா?
பார்த்தேனே.. விரிவாக விளக்கம் தந்தாரே.. அதுக்கும் ‘வருகைக்கு’ம் என்ன சம்பந்தம்?
இருக்கே… சிஎம் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசும் போது, “ஊரிலே கல்யாணம் என்றால், மார்பிலே சந்தனம் என்று சொல்வார்கள். அதுபோல கூட்டணிக் கட்சிக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.. அவர்கள் நினைக்கும் கூட்டணி அமையலாம்.. அமையாமல் போகலாம்..மெகா கூட்டணியே அமைத்தாலும் மக்கள் பாடம் புகட்டுவர்” என எடப்பாடிக்கு பதில் கொடுத்ததை கவனித்தீங்களா?
ஆமாம்.. விஜய்யுடன் அதிமுக கூட்டணிக்கு முயற்சிப்பதை சொல்லி இருக்கிறார்..
சிஎம் சொன்னமாதிரி நடக்குதுன்னு டெல்லி தகவல்கள் சொல்லுது.. நம்மிடம் பேசிய டெல்லி சோர்ஸ்கள், “கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில விசாரணை நடந்த போது அமித்ஷா தரப்பில் ‘சிறப்பு கவனம்’ எடுக்கப்பட்டது.. அப்போ தவெக ஆதவ் அர்ஜூனாவும் கூட பாஜக லீடர்களின் உதவியை கேட்டிருந்தாரு..

இதுக்கு பிறகுதான் பாஜக கூட்டணிக்கு விஜய் வருவது உறுதின்னு சொல்லி இருக்கிறார் அமித்ஷா.. இந்த தகவல் அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கும் பாஸ் செய்யப்பட்டு, விஜய் கூட்டணிக்கு வருவதால அதற்கு தகுந்த மாதிரி அரசியல் செய்யுங்கன்னும் சொல்லி இருக்காங்க..
ஓ.. கன்பார்ம் செஞ்சுட்டாங்களா?
எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல.. நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கும் கூட இந்த தகவலை அமித்ஷா தரப்பில் இருந்து பாஸ் செஞ்சிருக்காங்க..
இதனால்தான் விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி- நயினார் குரல் சத்தமாக கேட்குது..
அண்ணாமலை டோன் வேற மாதிரி இருக்கே?
ஆமாம்.. அண்ணாமலையைப் பொறுத்தவரைக்கும் விஜய், கூட்டணிக்கு வருவார் என்பதை நம்பலையாம்.. நம்ம ஊரு பாலிட்டிக்ஸை டெல்லி சரியா புரிஞ்சுக்கலைன்னு சொல்வதுடன் சட்டமன்ற தேர்தலில் விஜய் தனித்தே போட்டியிடுவாருன்னுதான் அண்ணாமலை நம்புகிறார்” என்கின்றனர்.
அமித்ஷா தரப்பில் உளவுத்துறை அதிகாரிகள் விஜய் தரப்பை தொடர்பு கொண்டு, ‘கூட்டணி பற்றி என்ன முடிவில் இருக்கிறார்?’ என அடிக்கடி கேட்டு ரிப்போர்ட் அனுப்பிகிட்டு இருக்காங்களாம்… அதேபோல அமித்ஷாவுக்கு நெருக்கமான ஜூடிசியல் கிருஷ்ணமூர்த்தியும் தொடர்ந்து விஜய் தரப்புல பேசிகிட்டே இருக்காரு
அதெல்லாம் சரி.. விஜய் என்ன சொன்னார்?
விஜய் தரப்புலதான் இவ்வளவு பேச்சும் நடக்குதே தவிர.. விஜய்யை நேரடியாக யாரும் சந்தித்து கூட்டணி பற்றி பேசவில்லை.. விஜய்யும் எந்த முடிவையும் சொல்லலை.. அதனால விஜய்யை சந்தித்து பேசுற முயற்சிகளிலும் மும்முரமாக இருக்காங்களாம்..
ஓஹோ.. இபிஎஸ்-க்காக ‘பரிகார யாகம்’ நடந்துச்சாமே.. விஜய் கூட்டணி அமையனும்னா?

இல்லைய்யா.. அதுவேற விவகாரம்.. எடப்பாடி பழனிசாமியின் மச்சான் வெங்கடேசன் சமீபத்துல வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போயிருக்காரு.. ஓலைச்சுவடியை பார்த்து கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தை சொல்றதுல வைத்தீஸ்வரன் கோவில்தான் ஃபேமஸ்..
இந்த நம்பிக்கையிலதான் வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் 2 பேருக்கான ஓலைச் சுவடிகளைப் பார்க்க சொல்லி இருக்காரு வெங்கடேசன்.
ஒன்னு வெங்கடேசனுக்கு; அடுத்தது எடப்பாடி பழனிசாமிக்கு..
எடப்பாடிக்கு ஓகே.. வெங்கடேசனும் அரசியலில் குதிக்கிறாரா?
யெஸ்யா.. பவானி சட்டமன்ற தொகுதியில் தாம் போட்டியிடலாம்னு நினைப்பதாகவும் அப்படி போட்டியிட்டா ஜெயிக்க முடியுமானும் முதல்ல ‘சுவடி’ பார்த்திருக்காரு வெங்கடேசன்..
ஓஹோ.. என்ன ரிசல்ட்டாம்?
பவானி தொகுதியில் போட்டியிட்டா வெங்கடேசன் ஜெயிக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லி இருக்காங்க.. அதுல வெங்கடேசன் செம்ம ஹேப்பியாகிட்டாராம்..
எடப்பாடி பழனிசாமிக்கு?
எடப்பாடி பழனிசாமி பற்றிய விவரங்களை சொல்லி ஓலைச்சுவடியை தேடி எடுத்து படிச்சுருக்காங்க..
அப்படி படிக்கும் போது ஜோதிடரே ஒருநிமிஷம் ஜெர்க் ஆகி,” எடப்பாடி மீண்டும் முதல்வராவது- ராஜயோகம் மீண்டும் கஷ்டம்னு இருக்கே” என சொல்லி இருக்கிறார்..
மச்சான் வெங்கடேசன் அதிர்ச்சியாகிப் போய், “இதை சரி செய்யுறதுக்கு பரிகாரங்கள் இருக்குதா சாமி”ன்னு கேட்டிருக்கார்..
அதற்கு, “எதிரிகளை துவம்சம் செய்யக் கூடிய “உத்திர யாகம்”னு ஒன்னு இருக்கு.. நம்ம வைத்தீஸ்வரன் கோவில், விழுப்புரம் பக்கத்துல இருக்கிற தென்சிறுவளூர், திருச்சி என 12 இடங்களில் இந்த உத்திரகாளி கோவில் இருக்கு.. அங்கெல்லாம் “பரிகார யாகம்” செய்யனும் என ஜோதிடர் சொல்லி இருக்கிறார்.

அதோடு நிற்காமல், வைத்தீஸ்வரன் கோவிலேயே இருக்கும் வடபத்ரகாளி அம்மனுக்கு முதல் பரிகார யாகத்தையும் நடத்தி முடிச்சுட்டாங்களாம்.. மற்ற இடங்களிலும் நடத்த போறாங்களாம்.. எல்லா தகவல்களையும் கேட்ட எடப்பாடி தரப்பில் ‘கனத்த மவுனம்’தான் இருந்துச்சாம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டி விட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
