மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற விழாவில், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பெருங்கவிஞர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாரதிராஜா இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் வைரமுத்து. இதுவரை 8,000 பாடல்கள் எழுதியுள்ள கவிஞர் வைரமுத்து, இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.
தனது கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இவரைக் ‘காப்பியக் கவிஞர்’ என்று கொண்டாடினார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் ‘கவிசாம்ராட்’ என்று பாராட்டினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இவருக்குக் ‘கவிப்பேரரசு’ என்று பட்டம் சூட்டினார்.
இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து மூன்று பல்கலைக் கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவராவார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து 40 க்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
தமிழ் இசைச் சங்கம் அவருக்கு, முத்தமிழ்ப் பேரறிஞர் என்கிற பட்டத்தை வழங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்தன.
முத்தமிழறிஞர் என்று கலைஞரை தான் அழைப்பார்கள். இப்போது இவர் அவரை மிஞ்சிவிட்டாரா? என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன. இதைத் தொடர்ந்து பட்டத்தின் பெயர் முத்தமிழ்ப் பெருங்கவிஞர் என்று மாற்றப்பட்டது. இந்தப் பட்டமானது 1 லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற விழாவில், வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’ பட்டமும் ரூ.1 லட்சம் பொற்கிழியும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில்…
பொன்விழாக் காணும் மதுரைத் தமிழ் இசைச் சங்கம்
“‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’ என்ற பட்டத்தை எனக்கு வழங்கியது
அமைச்சர் தங்கம் தென்னரசு பட்டயமும் பொற்கிழியும் வழங்கினார்
தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, திருமதி தேவகி முத்தையா, பொற்கிழி பெற்ற விசாகா ஹரி, மற்றும் அறங்காவலர்கள் உடனிருந்தனர்
தமிழ் இசையை மீட்டுக்கொடுத்த செட்டி நாட்டரசர் பாரம்பரியத்தைப் போற்றிச் சொன்னேன்
இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திக் கொள்வேன் என்று தலை வணங்கினேன்
அவைநிறைத்த பெருமக்காள்! அன்பு நன்றி”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மத்தி மீன் குழம்பு
இது என்னடா பிரேக்கிங் நியூஸுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு
விமர்சனம் : மழை பிடிக்காத மனிதன்!
எங்கெங்கு கனமழை?: வானிலை அப்டேட்!