விமர்சனம் : மழை பிடிக்காத மனிதன்!

Published On:

| By Kavi

உதயசங்கரன் பாடகலிங்கம்

கவிதைக்காரனா? ஆக்‌ஷன் ஹீரோவா?

தமிழ் திரையுலக நாயகர்களில் சிலரது படங்கள் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்று சொல்லத்தக்கதாக இருக்கும். அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும் அளவுக்கு, அவர்களது முந்தைய படங்கள் ரசிகர்களிடத்தில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே நிச்சயம் வழக்கத்திற்கு மாறான கமர்ஷியல் பட அனுபவத்தைப் பெறலாம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

அந்த வரிசையில், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ தற்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்தப் படமும் வழக்கமான விஜய் ஆண்டனி படம் போல அமைந்திருக்கிறதா? நல்லதொரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியைத் தருகிறதா?

எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது ‘மழை பிடிக்காத மனிதன்’?

கவிதையாய் சில காட்சிகள்!

‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற டைட்டிலை கேட்டவுடன் நமக்குள் என்ன மாதிரியான கதை தோன்றும்?

மழையை ஆராதிப்பதுதான் சினிமாவுலக நாயக, நாயகிகளின் வழக்கம். அப்படிப்பட்ட மழையை வெறுக்கத்தக்க அளவுக்கு, நாயகனின் வாழ்வில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு மழை காரணமாக அமையாவிட்டாலும், அச்சம்பவத்தின் பின்னணியில் இடம்பெற்றிருக்கலாம். அதனால், மழை என்றாலே நாயகனுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.

அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்ட நாயகன், ஒரு மழை நாளில் தனது எதிர்காலத்தைக் கண்டெடுக்கிறான். இந்த எதிர்காலத்தை நாயகி அல்லது அவரைச் சார்ந்தோர் என்று எப்படி வேண்டுமானாலும் யூகித்துக் கொள்ளலாம்.

அவர்களுக்கு ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்படும்போது, தனக்குப் பிடிக்காத மழையையும் சகித்துக்கொண்டு அந்த மனிதன் களத்தில் இறங்குவான். பாதிப்புகளைச் சரி செய்து வெற்றி வாகை சூடுவான்.

தொடர்ந்து தமிழ் சினிமா பார்க்கும் ஒருவருக்குள், இப்படிப்பட்ட கதைகள் சர்வசாதாரணமாகத் தோன்றும்.

அதற்காக, இதே கதையைப் படமாக எடுத்தால் அந்த ரசிகர் ஏற்றுக்கொள்ள மாட்டார். ‘இன்னும் அதிகமா..’ என்று கதையாக்கமும் காட்சியாக்கமும் அவரது எதிர்பார்ப்புகளை மீறிச் செறிவானதாக இருக்க வேண்டுமென்று விரும்புவார். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் ஒரு படைப்பைத் தர வேண்டும்.

ஆனால், அந்த எதிர்பார்ப்பை அப்படியே பிரதிபலித்தாற் போன்று திரையில் கதை சொல்லியிருக்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’. அதுதான் இப்படத்தின் முக்கியப் பிரச்சனை.

அந்தமான் தீவுகளில் ஒன்றில் வந்திறங்குகின்றனர் இரண்டு பேர். அவர்களில் ஒருவர், ‘இனிமேல் நீ இங்கு தான் இருக்க வேண்டும்’ என்கிறார். ’எந்தக் காரணத்திற்காகவும் உனது இருப்பை வெளிக்காட்டக் கூடாது’ என்பது அவரது முக்கிய நிபந்தனை. அதையும் மீறி இடையூறுகள் நேர்ந்தால் பயன்படுத்தத்தக்க வகையில் ஒரு சாதனத்தையும் தருகிறார். அதுவே, அவர்கள் இருவரும் பல்வேறு ‘ரகசிய நடவடிக்கைகளில்’ ஈடுபட்டவர்கள் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது.

தீவுக்கு வந்த முதல் நாளே, மழையில் சிக்கித் தவிக்கும் ஒரு நாய்க்குட்டிக்கு உதவுகிறார். அதனைத் தன்னுடனே எடுத்துச் செல்கிறார்.

வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒரு செல்வந்தர் சொல்லும் வேலையை முடிக்க, அடியாளாகக் கூட்டத்தில் ஒருவராக அழைத்துச் செல்லப்படுகிறார் அந்த நபர். பிறகு, தீவுக்கு வந்த புதிதில் பார்த்த ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்கிறார்.

அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஒரு பெண். அவருக்கு ஒரு மகன். அந்த தாயும் பிள்ளையும் அந்த நபரிடத்தில் உறவு பாராட்டுகின்றனர். மெல்ல மெல்ல, அவர்களில் ஒருவராகிறார் அந்த நபர். அப்போதும், தான் யார் என்று அவர் சொல்லத் தயாராக இல்லை.

ஒருநாள், தான் வளர்த்து வரும் நாயை ஓரிடத்தில் கட்டிப் போட்டுவிட்டுச் செல்கிறார் அந்த நபர். அப்போது, அதற்கு முன்னர் அந்த நாயை வளர்த்தவர்கள் அங்கு வருகின்றனர். அதனைத் தங்களோடு எடுத்துச் செல்கின்றனர்.

அன்று முதல் அக்குடும்பத்தினர் யார் எவர் என்று அறிய முயற்சிக்கிறார் அந்த நபர். தந்தையை இழந்த இரண்டு பெண்கள் அதனை வளர்த்து வருகின்றனர்.

மெல்ல அந்த நால்வரின் நலன்களே முக்கியம் என்றெண்ணும் அளவுக்கு, அவர்களுடன் உணர்வுரீதியாக ஒன்றுகிறார் அந்த நபர். உணர்வுகளை வெளிக்காட்டாதபோதும், அவர் மனம் அவர்களுக்காக இரங்குகிறது. எதையும் செய்யலாம் என்று தீர்மானம் கொள்கிறது.

ஆனால், முன்னொரு முறை அந்த நபர் சந்தித்த செல்வந்தர் அந்த நால்வருக்கும் குடைச்சல்கள் கொடுக்கிறார். அவரது ஆட்கள் அந்த மனிதர்களைத் துன்புறுத்துகின்றனர். அப்போது அந்த நபர் என்ன செய்கிறார்? அவர்களது துன்பங்களைத் தடுத்து நிறுத்தினாரா என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.

தீவுக்கு நாயகன் வந்திறங்கியவுடன் மழை பெய்கிறது. அது மட்டுமல்லாமல், நாயகன் கையில் இருந்த டீ கிளாஸ் அந்த மழையில் நனைகிறது. பிறகு, ஒரு நாய்க்குட்டி நனைவதைக் காண்கிறார். மழையில் நனையாமல் தரையில் இருக்கும் அதனைத் தன் கைகளுக்குக் கொண்டு வருகிறார். இவையனைத்துமே கவித்துவமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இப்படியொரு காட்சிக்கோர்வைக்குப் பிறகு, ஆக்‌ஷன் எபிசோடில் நாயகனின் கோர தாண்டவத்தையும் காண வேண்டுமே? அதன்பிறகு, இது போன்ற காட்சிகள் தொடர்ந்து வருமே? பார்வையாளரான நமக்குள் அதன் வழியாக ஒரேமாதிரியான அதிர்வை ஏற்படுத்த வேண்டுமே? ஒரே நேரத்தில் கவிதைக்காரனாகவும் ஆக்‌ஷன் ஹீரோ ஆகவும் நாயகனைக் காட்ட வேண்டுமே? இந்த ரகத்தில் தொடரும் நமது கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறுகிறது ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைக்கதை.

கவனம் தேவை!

’நான்’, ‘சலீம்’ படங்களில் எவரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பார் விஜய் ஆண்டனி. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முன்பாக முறைப்புடன் நிற்பார். ஆவேசத்துடன் வில்லனை பார்த்து ‘லெக்சர்’ அடிப்பார். அந்த கதாபாத்திர வார்ப்பினை அப்படியே வைத்தால் ‘மினிமம் கியாரண்டி’ என்று களமிறங்கியிருக்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’. ‘ரோமியோ’ போன்ற வகைமைகளுக்கு விஜய் ஆண்டனி தாவியதைப் பார்க்கையில், ‘இது ரொம்ப பழைய படமோ’ என்று தோன்றுகிறது. அந்த சிந்தனையே தேவையில்லை என்பது போல ‘சும்மா’ வந்து போயிருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படம், திரைக்கதைத் தேர்வில் ’கவனம் தேவை’ என்றுணர்த்தும் விதமாக உள்ளது.

மேகா ஆகாஷ் இதில் நாயகி என்று சொன்னால் அவரே நம்ப மாட்டார். அந்தளவுக்கே இதில் அவரது காட்சிகள் அமைந்திருக்கின்றன.

சரண்யா பொன்வண்ணன் இதில் நடித்திருக்கும் பாத்திரம் புதிதல்ல. ஏற்கனவே பல தமிழ் படங்களில் நாம் பார்த்தது தான்.

அவரது மகனாக நடித்திருக்கும் பிருத்வி ஆம்பர் துறுதுறுவென்ற உடல்மொழியுடன் திரிகிறார். ஆனால், அவரது முகம் தான் நம் நினைவில் பதிய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

சரத்குமார், சத்யராஜ் போன்றவர்கள் இதில் நடித்திருக்கின்றனர் என்று சொல்வதைவிடத் தலைகாட்டியிருக்கின்றனர் என்பதே மிகச்சரி. அதிலும் சத்யராஜ் பாத்திரத்திற்கு விஜய் மில்டன் வைத்திருக்கும் பெயர் எல்லாம் தலையைக் கிறுகிறுக்க வைக்கின்றன. இயக்குனர் தான் நினைத்தவரையே அவ்வேடத்தில் நடிக்க வைத்திருந்தால் மட்டும் இக்கதையில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது?

இவர்கள் தவிர்த்து தலைவாசல் விஜய், ‘சாட் பூட் த்ரி’ பிரனிதி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

வில்லனாக ‘டாலி’ தனஞ்ஜெயா தோன்றியிருக்கிறார். இதில் தனஞ்ஜெயாவின் பாத்திரம் நன்றாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அவரது பெர்பார்மன்ஸும் அமைந்துள்ளது.

ஆனால், கிளைமேக்ஸ் காட்சியில் அவர் கண் கலங்குவதெல்லாம் ‘லொள்ளுசபா’வை நினைவூட்டுகிறது.

கலை இயக்குனர் ஆறுசாமி, படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்., ஸ்டண்ட் இயக்குனர்கள் சுப்ரீம் சுந்தர், மகேஷ் மேத்யூ, கெவின் குமார் மற்றும் டிஐ, விஎஃப்எக்ஸ், டிஐ, ஒப்பனை உள்ளிட்டவற்றைக் கவனித்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குனரின் எண்ணத்தைப் பூர்த்தியாக்க உழைத்திருக்கின்றனர்.

பின்னணி இசையைப் பொறுத்தவரை அச்சு ராஜாமணியின் பங்களிப்பு அடுத்த காட்சியைப் பார்க்கத் தூண்டுகிறது. ஆனால், அதற்கேற்ற காட்சியாக்கம் அமையாதது பெரிய குறை.

ஒரு ஒளிப்பதிவாளராகச் சிறப்பாகப் பணியாற்றிய விஜய் மில்டன், இதில் கதை திரைக்கதை எழுதி இயக்கவும் செய்திருக்கிறார்.

ரொம்ப ஜாலியா ஒரு படம் டைரக்ட் பண்ணணும்’ என்று நினைத்திருக்கிறார் விஜய் மில்டன். ஆனால், அதற்காக இப்படியொரு படத்தை உருவாக்கியதை ஏற்க முடியாது.

ஒரு படத்தின் திரைக்கதையில் வேறு படங்களின் கதைக்கருவோ, காட்சியமைப்போ இடம்பெறுவது பெரிய பிரச்சனை அல்ல. ஆனால், அவை மட்டுமே இடம்பெறுவது தெரிய வரும்போதுதான், அந்தப் படமே பிரச்சனையாகத் தோன்றும். அதில் இரண்டாவது வகையைச் சார்ந்ததாக உள்ளது இப்படம்.

ஜான் விக், இயற்கை, சலீம் என்று பல படங்களை ‘உல்டா’ செய்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’. அதிலும் இதன் கிளைமேக்ஸ் காட்சி இருக்கிறதே, அது போன்று தொண்ணூறுகளில் வெளியான சில படங்களில் மட்டுமே பார்த்திருப்போம். நிச்சயமாக இன்றைய சூழலுக்கேற்ப அக்காட்சியை மறு உருவாக்கலாம் செய்யலாம்.

ஆனால், அது ‘காமெடி’யாக மட்டும் தோன்றிவிடக் கூடாது. தெரிந்தோ தெரியாமலோ, அக்காரியத்தைச் செவ்வனே செய்திருக்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’.

திரைக்கதை ட்ரீட்மெண்டால் மட்டுமே பலவீனமானதாக மாறியிருக்கிறது இப்படம். அது மட்டுமல்லாமல், விஜய் ஆண்டனி நடித்து முடித்து வெளியீட்டுக்குக் காத்திருக்கும் படங்கள் குறித்த எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி இருக்கிறது. இந்தப் படத்தின் மிகப்பெரிய குறை அதுதான்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ஷேக் ஹசினா எங்கே? இங்கிலாந்து செல்ல திட்டம்!

சி.வி.சண்முகத்தின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது: நீதிபதி ஜெயச்சந்திரன்