சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (ஜூன் 6) உத்தரவிட்டுள்ளார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து சவுக்கு சங்கர் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மதியத்திற்கு நீதிபதி ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.
குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ள குண்டர் சட்டம் வழக்கு தொடர்பான பதில் மனுவை கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தாக்கல் செய்தார்.
மேலும், “இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார் .
அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், ” நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பாக தாக்கல் செய்த பதில்மனுவை விட தற்போது தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் நிறைய ஆதாரங்கள் உள்ளது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்ய முடியுமா?
இந்த வழக்கை டிவிஷன் பெஞ்சிற்கு பரிந்துரைத்தால் முன்னுரிமை அடிப்படையில் நடத்த காவல்துறை தயாராக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரவீந்திரன், “காவல்துறை முன்னுரிமை அடிப்படையில் வழக்கை நடத்த தயாராக உள்ளது” என்றார்.
நீதிபதி ஜெயச்சந்திரன், ” குண்டர் சட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பாக காவல்துறை பதிலளிக்க நான்கு முதல் ஆறு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அத்தகைய வாய்ப்பை வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு அதிகாரம் மிக்க நபர்கள் தன்னை அணுகி சவுக்கு சங்கர் வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று நீதிபதி சுவாமிநாதன் சொல்லியிருக்கிறார். அப்படி இருந்தால் அவர் இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க வேண்டும்.
இந்த வழக்கை எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரை செய்கிறேன். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு முழுமையற்றதாக கருதப்படுகிறது. எனவே எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“எடப்பாடி – எஸ்.பி.வேலுமணி இடையே பிரச்சினை”: அண்ணாமலை பேட்டி!