பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் சில வரம்புகள் உள்ளன. விதிமுறைப்படி. சில குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் நடக்கும் பெரிய பணப் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கண்காணிக்கிறது. இதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்கப்படுகிறது. அதே சமயம், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றை வருமான வரித்துறை கண்காணிப்பதில்லை. வருமான வரித்துறை சில குறிப்பிட்ட பெரிய பணப் பரிவர்த்தனைகளை கவனிக்கிறது.
வருமான வரிச் சட்டம் பிரிவு 285BA மற்றும் வருமான வரி விதிகள், 1962, விதி 114E ஆகியவற்றின்படி, ஒரு நிதியாண்டில் குறிப்பிட்ட வரம்புகளைத் தாண்டும் சில உயர் மதிப்புப் பரிவர்த்தனைகள் வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இதற்காக, படிவம் 61Aஐப் பயன்படுத்தி குறிப்பிட்ட பரிவர்த்தனைகளின் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த அறிக்கையிடலின் நோக்கம், நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும், வரி ஏய்ப்புச் செயல்களைக் கண்டறிய உதவுவதும் ஆகும்.
வருமான வரித்துறை கண்காணிக்கும் சில முக்கியப் பரிவர்த்தனைகள் இவைதான்:
- சேமிப்புக் கணக்குகள் அல்லது நிரந்தர வைப்புத்தொகைக் கணக்குகளில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்யப்படும் தொகைகள் கண்காணிக்கப்படுகின்றன.
- நடப்புக் கணக்குகளில் ரூ. 50 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்யப்படும் அல்லது எடுக்கப்படும் தொகைகளும் கவனிக்கப்படுகின்றன.
- கிரெடிட் கார்டு மூலம் ரூ. 1 லட்சத்திற்கு மேல் ரொக்கமாகச் செலுத்தப்படும் தொகைகள், அல்லது மற்ற வழிகளில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் செலுத்தப்படும் தொகைகளும் வருமான வரித்துறையின் கவனத்தைப் பெறுகின்றன.
- ரூ. 30 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்து வாங்குதல் அல்லது விற்றல் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன.
- ரூ. 10 லட்சத்திற்கு மேல் பங்குகள், பத்திரங்கள் அல்லது பரஸ்பர நிதிகளில் செய்யப்படும் முதலீடுகளும் கவனிக்கப்படுகின்றன.
இந்த வரம்புகள், வருமான வரி அதிகாரிகள் முக்கிய நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க உதவுகின்றன. வழக்கமான, சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் பொதுவாக அவர்களின் கவனத்திற்கு வருவதில்லை. ஆனால், வருமான வரித்துறை குடிமக்களின் மின்னஞ்சல்கள், சமூக வலைத்தளக் கணக்குகள், ஆன்லைன் ஷாப்பிங், டிஜிட்டல் பேமெண்ட்கள் மற்றும் தனிப்பட்ட செயலிகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதாக ஒரு வதந்தி பரவியது. இதை இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு மறுத்துள்ளது.
