சென்னையில் டபுள் டக்கர் பேருந்து : எந்தெந்த ரூட்களில் இயக்கப்படும்?

By Kavi

|

Published on 12 Jan 2026, 4:06 PM

சென்னையில் டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்து சேவையினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேல் தளத்தில் அமர்ந்து சென்னை மாநகரை ரசித்துக்கொண்டே பயணிக்கலாம். சென்னை வரும் சுற்றுலா பயணிகள் இந்தப் பேருந்தை அதிகம் விரும்புவார்கள்.

ADVERTISEMENT

பின்னர் இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. 2008 முதல் இந்த பேருந்தை சென்னையில் பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில் சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவையினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற “அயலகத் தமிழர் தினம் – 2026” விழாவில், பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் வழங்கப்பட்ட இரட்டைத் தள மின்சார (Double-Decker EV Bus) பேருந்து சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தப் பேருந்து அமெரிக்க வாழ் தமிழர்கள் (NRI) மற்றும் அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம் இணைந்து, ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் ஹிந்துஜா அறக்கட்டளை, மும்பை மூலமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை இயக்குவதற்காக வழங்கப்பட்டது. 

ADVERTISEMENT

முதற்கட்டமாக சென்னையில், முன்மொழியப்பட்ட சுற்றுலா வழித்தடத்தின் படி, TTDC தலைமையகம் – LIC – ஸ்பென்சர் பிளாசா – மக்கா மஸ்ஜித் – பி. ஓர் & சன்ஸ் (வாட்ச் டவர்) – பல்லவன் சாலை – பாடிகார்டு முனீஸ்வரர் கோவில் – ராஜா அண்ணாமலை மன்றம் – சென்னை உயர்நீதிமன்றம் – தலைமைச் செயலகம் – ரிசர்வ் வங்கி – சென்னை துறைமுகம் – வெற்றி போர் நினைவுச்சின்னம் – நேப்பியர் பாலம்,

அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள், மெரினா கடற்கரை – கலங்கரை விளக்கம் – பட்டினப்பாக்கம் கடற்கரை – சாந்தோம் தேவாலயம் – அகில இந்திய வானொலி – கலங்கரை விளக்கம் – காவல்துறை தலைமை அலுவலகம் – குயின் மேரீஸ் கல்லூரி – விவேகானந்தர் இல்லம் – பிரெசிடென்சி கல்லூரி – எழிலகம் – சென்னை பல்கலைக்கழகம் – தூர்தர்ஷன் கேந்திரா – இராஜாஜி மண்டபம் – ஓமந்தூரார் அரசு மருத்துவமனை – TTDC தலைமையகம் ஆகிய வழித்தடங்களில், நகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்களை முழுமையாகக் காணும் வகையில் பனோரமிக் (Panoramic) பார்வை வசதியுடன் இப்பேருந்தின் சேவை இயக்கப்பட உள்ளது.

சுற்றுலா துறை மூலம் முன்பதிவு செய்து இந்தப் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel