ADVERTISEMENT

டாக்டர். பீலா வெங்கடேசன் IAS.. வாழ்வின் அறியப்படாத ‘அகப் பக்கங்களும் துயரங்களும்’

Published On:

| By Mathi

The unknown sides of Dr. Beela Venkatesan IAS

பீலா ராஜேஷ் IAS.. தமிழ்நாட்டு மக்கள் எளிதாக மறந்துவிடாத ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர்.

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்திய காலத்தில் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை செயலராக இருந்தவர்..

ADVERTISEMENT

கொரோனா காலங்களில் வீடுகளுக்குள் மக்கள் முடங்கிய போது, கொரோனா குறித்த தகவல்களை, கட்டுப்பாடுகளை நாள்தோறும் டிவியில் தோன்றி மக்களுக்கு விளக்கமாக சொன்னவர்தான் பீலா ராஜேஷ் IAS…

தனியார் டிவி சேனல்கள் வராத காலங்களில் அரசின் தூர்தர்ஷனில் செய்தி வாசித்தவர் ஷோபனா ரவி.. அவரது குரல் உச்சரிப்புக்காக மட்டுமல்ல.. அவர் ஒவ்வொரு நாளும் அணியும் உடையும் மக்களின் கவனம் பெற்றது.. அதே போல லிப்ஸ்டிக் முகத்துடன் ஒவ்வொரு நாளும் பீலா ராஜேஷ் IAS பேட்டி தரும் போது அணிந்திருந்த சேலைகள் பெண்களின் கவனம் பெற்றது.. பேசுபொருளாக இருந்தது.

ADVERTISEMENT

இப்படி பொதுமக்களிடம் எளிதாக சென்றடைந்த ஆட்சிப் பணி அதிகாரி பீலா ராஜேஷ் இப்போது நம்முடன் இல்லை.. 56 வயதே ஆன நிலையில் மார்பகப் புற்று நோய் அவரை காவு கொண்டது என்பது பெருந்துயரம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலா ராஜேஷ் என்ற பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். சென்னையில் நேற்று செப்டம்பர் 24-ந் தேதி மாலை 6 மணிக்கு காலமானார்.

ADVERTISEMENT

பீலா ராஜேஷ் என அறியப்பட்டவர் மரணத்தின் போது பீலா வெங்கடேசன் என உச்சரிக்கப்பட்டார்.. தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்களால் இறுதி காலங்களில் பீலா வெங்கடேசனாக தந்தையின் பெயரை கொண்டவராக வாழ்ந்து மறைந்துள்ளார்.

யார் இந்த பீலா ராஜேஷ் என்ற பீலா வெங்கடேசன் IAS?

பீலா ராஜேஷின் தந்தை என்.வெங்கடேசன்.. – டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; தாயார் ராணி வெங்கடேசன், சாத்தான்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் பீலாவின் தந்தை வெங்கடேசன்.

வெங்கடேசனின் தந்தைக்கு சென்னை கொட்டிவாக்கத்தில் பெரிய அளவில் நிலம் இருக்கிறது. இன்றைக்கும் சென்னை கொட்டிவாக்கத்தில் தோப்பும் தோட்டமுமாக விரிந்து பரந்து இருக்கிறது வெங்கடேசனின் பங்களா. இதேபோல சென்னையில் பல இடங்களில் நிலமும் இடங்களும் உள்ளன.

வெங்கடேசன்- ராணி தம்பதிக்கு 1969-ல் பிறந்தவர் பீலா.

செல்வச் செழிப்புடன் வளர்க்கப்பட்ட தமது ஒரே மகளை மருத்துவம் படிக்க வைத்தார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பீலா மருத்துவம் படித்து முடித்தார்..

அப்போது தூத்துக்குடியில் வெங்கடேசன் காவல்துறை உயர் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.. தமக்கு கீழ் ASP அதிகாரியாக இருந்த ஒடிஷா கேடரைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ் IPS-ன் செயல்பாடுகள், வெங்கடேசனை ஈர்க்க, தமது டாக்டர் மகளை ராஜேஷ் தாஸ்-க்கு திருமணம் செய்து வைத்தார். 1992-ம் ஆண்டு இந்த திருமணம் நடைபெற்றது.

சென்னையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அதிகார பிரமுகர்கள் அனைவரும் வந்து வாழ்த்த திருமண வரவேற்பு நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட விவிஐபிக்களும் இந்த திருமணத்துக்கு படையெடுத்து வந்திருந்தனர்.

பீலா- ராஜேஷ் தாஸ் தம்பதிக்கு பிங்கி, பிரீத்தி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

டாக்டர் பீலா- ராஜேஷ் தாஸ் IPS தம்பதியினரின் வாழ்க்கையில் வசந்த காலம் விடைபெற்று புயலடிக்க தொடங்கியது. இருவருக்கு இடையே பெரும் மனக்கசப்பு வேரூன்றி போனது..

அப்போது, மகளின் வாழ்க்கையை சரி செய்வதற்காக வெங்கடேசன் எடுத்த முயற்சிகள் எதுவும் கை கொடுக்கவில்லை. தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரியாக செல்வாக்குடன் இருந்த வெங்கடேசனுக்கு, ஐபிஎஸ் மருமகன் ராஜேஷ் தாஸிடம் அவமானம்தான் கிடைத்தது..

அதிகார உச்சத்தின் வலிமையை நன்றாகவே உணர்ந்திர்ருந்த வெங்கடேசன், தமது டாக்டர் மகளையும் அதிகாரப் பதவியில் அமர்த்துவதற்கு சபதம் எடுத்தார்.

ஆம்.. டாக்டர் பீலாவிடம், அதிகாரம் என்றால் என்ன? அதிகாரம் என்னவெல்லாம் செய்யும்? அதிகாரத்தின் அசல் முகங்கள் என்ன என்பதை எல்லாம் தமது வாழ்க்கை அனுபவங்களில் இருந்தே ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார் வெங்கடேசன்.

வெங்கடேசன், தொடக்க காலத்தில் சிபிஐ-ல் எஸ்.பியாக பணிபுரிந்த போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்க்காரியா விசாரணைக் கமிஷனுக்கு- கலைஞருக்கு எதிரான தகவல்களை பாஸ் செய்தார்.

இந்த கதையை மட்டுமல்ல.. தாம் செங்கல்பட்டு டிஐஜியாக பணிபுரிந்த காலத்தில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளிட்டவை தமது கட்டுப்பாட்டில் இருந்தது.. அப்போது நடந்த முக்கிய நிகழ்வுகளை மகள் டாக்டர் பீலாவிடம் பகிர்ந்து கொண்டார் வெங்கடேசன்.

ஒருமுறை, டிஐஜி வெங்கடேசனை எம்ஜிஆர் அழைத்தார்.. அப்போது, சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் யார் யார்? அவர்களது போட்டோக்கள் வேண்டும்.. என எம்ஜிஆர் கேட்டார்.

டிஐஜி வெங்கடேசனுக்கு பெரும் குழப்பம். சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசாரின் போட்டோக்களை சிஎம் எம்ஜிஆர் ஏன் கேட்க வேண்டும்? என்ன பிரச்சனையாக இருக்கும்? என அல்லாடுகிறார்.

அப்போதுதான் சில விஷயங்கள் வெங்கடேசன் காதுகளுக்கு கிடைக்கிறது..

எம்ஜிஆருடன் ‘இதயக் கனி’, ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராதா சலுஜா, மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். நடிகை ராதா சலுஜா, கன்னிமாரா நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். சென்னை தி.நகர் இல்லத்தில் எம்ஜிஆரை சந்தித்த ராதா சலுஜா, “நீங்க தமிழ்நாட்டின் சிஎம்.. உங்க அதிகாரம் விமான நிலையத்தில் எல்லாம் செல்லாதா? ஏர்போர்ட்டில் உங்க பெண் போலீசார் ரொம்பவே என்னை சோதனையிட்டாங்க.. என்னுடைய ஹேண்ட் பேக்கில் ஆபரணங்கள், உள்ளாடைகளை கூட விட்டு வைக்காமல் சோதனை போட்டனர்.. இதுதான் உங்க அதிகாரமா?” என குமுற, எம்ஜிஆருக்கு கோபம் வந்துவிட்டது.

நடிகை ராதா சலுஜாவை சோதனையிட்ட பெண் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துதான் டிஐஜி வெங்கடேசனிடம் பெண் போலீசாரின் போட்டோக்களை கேட்டார் எம்ஜிஆர்.

இந்த விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்ட வெங்கடேசன், எம்ஜிஆரிடம் , “பெண் போலீசார் பாவம்.. ஏழைகள்.. அவங்க குடும்பமே அந்த பெண் போலீசாரின் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.. வேறு யாரோ என நினைத்து சோதனை செய்துவிட்டனர்..” என சொல்ல, எம்ஜிஆரின் கோபம், ‘இளகி’ சரி என விட்டுவிட்டார்..

ஒரு நடிகைகயை சோதனையிட்டதற்காக ‘அதிகாரம்’ எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தமது டாக்டர் மகள் பீலாவுக்கு விவரிக்க இந்த நிகழ்வுகளை எல்லாம் பட்டியலிட்டு சொன்னார் வெங்கடேசன்.

அதேபோல தாம் திருச்சியில் பணியாற்றிய போது நிகழ்ந்த நிகழ்வுகளையும் மகள் பீலாவிடம் விவரித்திருக்கிறார் வெங்கடேசன்.

எம்ஜிஆர் காலத்தில் கோலோச்ச்சிய 2-ம் கட்ட தலைவர்களில் திருநாவுக்கரசரும் ஒருவர். டிஐஜியாக இருந்த வெங்கடேசனிடம், எஸ்ஐ டிரான்ஸ்பர்கள் பற்றி சொல்கிறார்.. வெங்கடேசன் இதை கிடப்பில் போட்டுவிடுகிறார். இந்த பிரச்சனையும் எம்ஜிஆரின் கவனத்துக்கு போனது..

அப்போது எம்ஜிஆரிடம், திருச்சி சரகத்தில் 6 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.. ஒவ்வொருவரும் டிரான்ஸ்பர்கள் போட சொல்கின்றனர். என்ன செய்வது என சொன்னார் வெங்கடேசன்.

அதே காலகட்டத்தில் தலைமை செயலாளராக இருந்த டிவி அந்தோணியை அழைத்து எம்ஜிஆர் பேசும் போது, திருச்சி ஆட்சியர் டிரான்ஸ்பர் பற்றி கேட்டார்.. அதற்கு, கலெக்டர் இயல்பாகவே புரமோசனில் போக இருக்கிறார்.. அதனால் அவரை மாற்றவில்லை என்றார்.

அப்போது உடனிருந்த திருநாவுக்கரசர், ” அண்ணே தமிழ்நாட்டுக்கு நீங்க சிஎம்னா.. திருச்சிக்கு ஆர்.எம். வீரப்பன்தான் (ஆர்எம்வீ) சிஎம்.. அவர் சொன்னால்தான் செய்வாங்க” என்று சொன்ன கையோடு ஏற்கனவே டிஐஜி வெங்கடேசன், தாம் பரிந்துரை செய்த டிராஸ்ன்பர்களை கிடப்பில் போட்டதையும் சொன்னார் திருநாவுக்கரசர்.

இதனையடுத்து திருச்சி ஆட்சியர் மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் உடனடியாக டிரான்ஸ்பர் செய்ய உத்தரவிட்டார் எம்ஜிஆர்.

இப்படி எல்லாம் அதிகாரம் எந்த எல்லைக்கும் போய் விளையாடும் என்பதை மகள் பீலாவிடம் விலாவாரியாக சொல்கிறார் வெங்கடேசன்.

இப்படி தந்தையால் வழிநடத்தப்பட்ட பீலா, 1996-ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.

ஒரு தந்தையின் கனவு நிறைவேறிய பெருமிதம் வெங்கடேசனுக்கு..

இன்னொரு பக்கம், கணவர் ராஜேஸ் தாஸிடம் , ‘உங்களைப் போல அதிகாரம் படைத்த பதவிகளில் ஒன்றான ஐஏஎஸ் அதிகாரியாவேன்’ என்ற சபத்தை நிறைவேற்றிய மனநிறைவு பீலாவுக்கு..

ஆனால் ஒருங்கிணைந்த பீகார் மாநில ஐஏஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கினார் பீலா ஐஏஎஸ்.

டாக்டர் பீலா IAS-ஐ தமிழ்நாட்டுக்கு மாற்றி கொண்டுவர தீவிரமாக முயற்சிகள் எடுத்தார் வெங்கடேசன். பிரதமராக தேவகவுடா இருந்த போது மத்திய அமைச்சராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் மூலமாக கராத்தே தியாகராஜன் உதவியுடன் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்தார்.. ஆனால் அது நடக்காமல் போனது. தந்தையின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகுதான் டெபுடேசனில் தமிழகம் வந்தார் பீலா IAS.

இப்படித்தான் தமிழ்நாட்டு நிர்வாகத்தில் பீலா IAS டெபுட்டி செகரட்டரியாக என்ட்ரியானார்.. தமிழக முதல்வரின் Special Cell -ல் சிறப்பு அதிகாரியாக சென்னை தலைமை செயலகத்தில் பொதுமக்கள் மனுக்களை பெறுகிற பொறுப்பில் இருந்தார் பீலா IAS. அந்த பொறுப்பில் இருந்தாலும் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்ட பீலாவுக்கு ஏமாற்றம் தரும் வகையில் இடம் மாற்றம்தான் பரிசாக கிடைத்தது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால்..

அப்போது, அன்றைக்கு காங்கிரஸில் இருந்த கராத்தே தியாகராஜன் மூலமாக நிழல் அரசாங்கம் நடத்திய சசிகலா கணவர் நடராஜனை சந்தித்து வேறு ஒரு பணியிடம் பெற்றுவிடுகிறார் பீலா ஐஏஎஸ்.

இதே காலகட்டத்தில் பீலா IAS-ன் தாயார் ராணி வெங்கடேசன், அரசியல் களத்தில் ஏறுமுகம் பெற்றார். 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 2011-ல் ஶ்ரீ வைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சியில் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசன் எம்.எல்.ஏ.

பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்த போது மத்திய அமைச்சராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இடம் பெற்றிருந்தார். இந்த செல்வாக்கில், பீலா ஐஏஎஸ்-ன் ஜார்க்கண்ட் கேடர், தமிழ்நாடு கேடராக மாற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசில்

  • ஆதி திராவிடர்- பழங்குடிகள் நலத்துறை
  • மீன்வளத்துறை
  • வணிக வரி மற்றும் பதிவுத் துறை
  • கைத்தறி மற்றும் ஜவுளித் துறை
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என பல்வேறு துறைகளிலும் பொறுப்பு வகித்தார் பீலா IAS.

இபப்டி மகள் ஐஏஎஸ் அதிகாரியாக, அதிகாரம் மிக்க பதவியில் அமர்ந்த போதும் ஒரு வழிகாட்டியாக தந்தை வெங்கடேசன், அதிகார வர்க்கத்தின் உள்முகங்களை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்..

தாம் பணிபுரிந்த காலத்தில் தமக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளை எல்லாம் வால்டர் தேவாரம், ஶ்ரீபால் போன்ற அதிகாரிகள் எப்படி எல்லாம் தடுத்தனர் என்ற அதிகாரப் போட்டியின் அகமுகங்களையும் மகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார் வெங்கடேசன்.

அதே நேரத்தில், “நான் என் மகளை ஐஏஎஸ் ஆக்கிவிட்டேன்.. மனைவியை எம்.எல்.ஏ. ஆக்கிவிட்டேன்.. எனக்கு முட்டுக்கட்டை போட்ட அந்த அதிகாரிகளால் இதை எல்லாம் செய்ய முடிந்ததா என்ன? என பெருமைப்பட்டுக் கொண்டார் வெங்கடேசன்.

இப்படி தமிழக அரசு நிர்வாகத்தில் படிப்படியாக உயர்ந்து 2020-ல் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றினார்.. அப்போதுதான் கொரோனா காலம்.

கொரோனா தகவல்களை டிவியில் சொல்வது மட்டுமல்ல.. தொலைபேசியில் யார் தொடர்பு கொண்டு உதவி கேட்டாலும் அனைத்து உதவிகளையும் அந்த கால கட்டத்தில் செய்தவர் பீலா IAS.

IPS கணவரான ராஜேஷ் தாஸ்- பீலா IAS இடையேயான திருமண வாழ்க்கை நீண்டகாலம் அமைதியானதாகவும் இல்லை.. முரண்பாடுகள் மோசமான சம்பவங்களாக நடந்தன..

பீலாவின் கணவர் ராஜேஷ் தாஸுக்கு பாலியல் புகார் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க, இருவரது திருமண பந்தமும் முறிவுக்கு வந்தது..

இதன் பின்னர் பீலா ராஜேஷ் IAS.. அதிகாரப்பூர்வமாக பீலா வெங்கடேசன் IAS என பெயர் மாற்றினார்.. ஊடகங்களிலும் கூட இதனை விளம்பரம் செய்திருந்தார்.

மரணம் தம்மை விழுங்கிய நொடிகளில் கூட தமது தாயாரிடமும் பிள்ளைகளிடமும், “எந்த சூழ்நிலையிலும் ராஜேஸ் தாஷை என்னை பார்க்க அனுமதிச்சுடாதீங்க.. என் முகத்தை அவரு பார்க்கவே கூடாது” என சொல்லிவிட்டு தமது கண்களை ‘நிரந்தரமாக’ மூடிக் கொண்டார் பீலா வெங்கடேசன் IAS.

மகளின் இந்த மரண வாக்குமூலத்தை கேட்டு தமது கணவர் வெங்கடேசனின் படத்தைப் பார்த்தபடியே, “என் மகளை அவருக்கு கட்டிக் கொடுக்காதீங்கன்னு எவ்வளவோ சொன்னேன்.. கேட்கலையே.. என் மகளோட வாழ்க்கையே முடிஞ்சு போச்சே” என தாயார் ராணி வெங்கடேசன் கதறி இருக்கிறார்.

பீலாவின் உடலை பார்க்க ராஜேஸ் தாஷ் வருவார்.. வந்து ஏதாவது தகராறு செய்வார் என்பதை உணர்ந்த தாயார் ராணி வெங்கடேசன், குடும்ப நண்பரான கராத்தே தியாகராஜின் உதவியை நாடியும் இருந்தார்.

பீலா வெங்கடேசனாக வாழ்க்கையை தொடங்கி பீலா ராஜேஷாக வாழ்ந்து இறுதியில் பீலா வெங்கடேசனாகவே மறைந்தார்..

பீலா வெங்கடேசன் IAS உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் இறுதி மரியாதை செலுத்தினர்.

கொரோனா காலத்தில் பீலா IAS-ன் லிப்ஸ்டிக் முகத்தையும் சீரான முடியையும் பார்த்து பலரும் வியந்தனர்.. ஆனால் அவரது அத்தனை பொலிவையும் தலைமுடியையும் இறுதி நாட்களில் புற்று நோய் பறித்துக் கொண்டு விட்டது..

புற்றுநோய் ஏற்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.. மருத்துவர்கள் சொல்லும் காரணங்களில் ஒன்று, “தாம் நம்புகிற ஒருவர் பெருந் துரோகத்தை செய்கிற போது அதையும் தாங்க முடியாத சூழல் புற்று நோயை உருவாக்குகிறது” என்பது.

ஒரு மருத்துவராக வாழ்க்கையை தொடங்கி திருமண வாழ்வின் வலிகளால் அதிகாரப் பதவியை நோக்கி நகர்ந்து.. துரோகங்களின் தாக்குதலையும் புற்றுநோயையும் சுமந்து இந்த மண்ணில் இருந்து தனது 56 வயதில் பிரிந்துவிட்டார் பீலா ராஜேஷ் IAS என்ற பீலா வெங்கடேசன் IAS.

இறப்புக்கு காரணம் என்ன? பீலாவின் கொடுமையான தருணங்கள்... கதறிய தாயார்... | Beela Venkatesan IAS
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share