சாமிநாத சர்மாவின் “எனது பர்மா வழிநடைப் பயணம்” : புதிய பதிப்பின் முன்னுரை!

Published On:

| By Kavi

மு. இராமனாதன்

முதன்மை ஆதாரங்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு முக்கியமானவை. ஏனெனில், அவை நிகழ்வு நடைபெற்ற காலத்தில், களத்திலிருந்து எழுதப்பட்ட நேரடி ஆவணங்கள். பின்னோக்கிப் போனால் இப்படியான ஆவணங்கள் கிமு 30ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கின்றன. அது முதலான வரலாறை ஆய்வாளர்கள் ‘ஏடறிந்த வரலாறு’ என்று குறிக்கின்றனர். அதற்கு முந்தைய காலத்திற்கான தரவுகள் எழுத்து வடிவத்தில் கிடைக்கவில்லை. ஏனெனில், மனிதன் அப்போது எழுதத் தொடங்கவில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு ஏடறிந்த காலத்திற்கு வெகு காலம் முன்னதாகவே தொடங்கி விடுகிறது. ஏடறிந்த காலம் முதல் அதன் வரலாற்றை அறிவதற்கு ஆவணங்கள் துணை செய்கின்றன. இந்த ஆவணங்கள் ஆதியில் பானை ஓடுகளாக இருந்தன. பிற்பாடு கல்வெட்டுகளாகவும் செப்பேடுகளாகவும் ஓலைச் சுவடிகளாகவும் உருக்கொண்டன. ஆனால் இந்த ஆவணங்கள் முழுமையானவையாக இல்லை. கிடைத்தவற்றிற் பல, முறையாகப் பேணப்படவும் இல்லை.

ADVERTISEMENT

பின்னாளில் அச்சுப் பயன்பாடு வந்தது. சமீப காலங்களில் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆகவே இந்த ஆவணப்படுத்துதல் எளிதாகவும் முறையாகவும் நடந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. ஆவணப்படுத்துவதில் உள்ள அலட்சியமும் அக்கறையின்மையும் இன்று வரை தொடர்கின்றன. இந்தச் சூழலில்தான் வாராது வந்த மாமணியாக விளங்குகிறார் வெ.சாமிநாத சர்மா.

இன்றும் இலட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிற நாடு மியான்மர் (பர்மா). 1937 வரை பிரிட்டிஷ்-இந்தியாவில் ஒரு மாநிலமாக இருந்தது பர்மா. இந்தியர்கள், அதிகமும் தமிழர்கள், செறிவாக வசித்து வந்தனர். ரங்கூன் இந்தியர் பலரின் உயிரை வளர்த்தது. இந்தியாவின் கடைசி மொகலாய மன்னர் பகதூர் ஷா பர்மாவில்தான் சிறை வைக்கப்பட்டார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய சுதந்திர லீக் காலூன்றியிருந்த அந்நிய மண்ணாக இருந்தது பர்மா. இரண்டாம் உலகப் போரின் போது பர்மா ஜப்பானிய ஆளுகைக்கு உள்ளாகியது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். விடுதலைக்குப் பிறகான ராணுவ ஆட்சியில் இந்தியர்களின் வாழ்வுரிமை சிக்கலாகியது. இந்தியர்களில் பலர் பல கட்டங்களில் வெளியேறினர். தமிழகத்தின் பல நகரங்களில் இன்றும் நீடித்திருக்கும் பர்மா காலனிகள் அந்தத் துயரக் கதைகளை நினைவூட்டும்.

ADVERTISEMENT

இந்தக் கசப்பான அனுபவங்களில் ஒன்றுதான் 1942இல் பர்மாவை ஜப்பான் ஆக்கிரமித்த போது அங்கிருந்து வெளியேறியவர்களின் கதை. செல்வந்தர்களுக்கு, அவர்களிலும் முந்திக்கொண்டவர்களுக்குக் கப்பல் பயணம் வாய்த்தது. போர் உக்கிரமடைந்த போது கடல் வழி அடைபட்டது. நேரடிச் சாலைகள் இல்லை. காடும் மலையும் ஆறும் கணவாயும் இடையிட்ட இந்தக் கடியவழிப் பயணத்தைக் கிடைத்த வாகனங்களின் வாயிலாகவும், அதிகமும் கால் நடையாகவும் மாதக் கணக்கில் பயணப்பட்டு, இந்தியா வந்தவர்கள் பல்லாயிரம் பேர். வழியில் உயிர் நீத்தவர்கள் ஏராளம். அந்தத் துயரக் கதையொன்றின் நேரடி ஆவணம்தான் வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ என்கிற இந்த நூல். இந்த நிகழ்வின் ஒரே முதன்மை ஆவணமாக இந்த நூல் மட்டுமே இருக்கக்கூடும்.

வெங்களத்தூர் சாமிநாத சர்மா (17.9.1895 – 7.1.1978), திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெங்களத்தூரில் முத்துசுவாமி ஐயர்-பார்வதி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தமிழைத் தவிர ஆங்கிலம், தெலுங்கு, சம்ஸ்கிருதம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளும் அவருக்குத் தெரியும். தட்டச்சும் சுருக்கெழுத்தும் படித்தார். அலுவலகங்களில் எழுத்தராகப் பணியாற்றினார். ஆனால் தான் ஓர் எழுத்தர் அல்ல, எழுத்தாளர் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. பத்திரிகைகளில் கட்டுரை எழுதலானார். தொடர்ந்து திரு.வி.க. ஆசிரியராக இருந்த ‘தேசபக்தன்’ நாளிதழிலும், அடுத்து ‘நவசக்தி’ வார இதழிலும் துணையாசிரியராகப் பணியாற்றினார். ஆந்திர கேசரி டி. பிரகாசம் நடத்திய ‘ஸ்வராஜ்யா’விலும் பணியாற்றினார்.

ADVERTISEMENT

1932இல் பர்மாவுக்குப் புலம் பெயர்ந்தார். ரங்கூனில் சுதேசியப் பொருட்களையும் நல்ல நூல்களையும் தனது ‘பாரத் பந்தர்’ என்ற கடையில் விற்பனை செய்தார். ஆகஸ்ட் 1937இல் ரங்கூனிலிருந்து வெளியான ‘ஜோதி’ இதழின் ஆசிரியர் ஆனார். ஜோதி இதழ், பிப்ரவரி 1942 வரை, அதாவது அவர் பர்மாவிலிருந்து வெளியேறும் வரை தொடர்ச்சியாக வெளியானது. அரு. சொக்கலிங்கம் செட்டியார் எனும் நண்பர், சாமிநாத சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே 1936இல் ரங்கூனில் ‘பிரபஞ்ச ஜோதி பிரசுராலய’த்தைத் தொடங்கினார்.

சாமிநாத சர்மா எழுதிய நூல்கள் சுமார் 80. படைப்பிலக்கியத்திற்கும் கணிசமாகப் பங்களித்திருக்கிறார். எனினும் இவர் நினைவுகூரப்படுவது நாட்டு வரலாறுகளுக்கும், வாழ்க்கை வரலாறுகளுக்கும், அரசியல் ஆய்வுக் கட்டுரைகளுக்காகவும்தான்.

சாமிநாத சர்மாவின் நூல்களால் பயன் பெற்றவர்கள் பலர். அவர்களில் ஒருவர் கண்ணதாசன். அவர் சொல்கிறார்: “உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவில் இருபது சதவீதம் சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.” அது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்பது அவரது நூலை வாசிக்கிற யாராலும் உணர முடியும்.

இந்தியா திரும்பியதும் வை. கோவிந்தனின் ‘சக்தி’, ஏ.கே.செட்டியாரின் ‘குமரி மலர்’ முதலிய இதழ்களில் பணியாற்றினார். 1947இல் ‘பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்’ மீண்டும் தொடங்கப்பட்டது. சாமிநாத சர்மாவின் பல துறை நூல்கள் மீண்டும் வெளிவரத் தொடங்கின. சென்னை, தியகராய நகர், உஸ்மான் சாலையில் அமைந்திருந்த அவரது வீட்டிலும், மனைவி மங்களம் அம்மையாரின் மறைவுக்குப் பிறகு, சென்னை கலாஷேத்ராவிலும் வசித்த சர்மா, 1978ஆம் ஆண்டு தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தனது நூல்களை வாரிசாக வழங்கிவிட்டு விடை பெற்றுக்கொண்டார்.

சாமிநாத சர்மா

சாமிநாத சர்மாவின் நூல்களுள் குறிப்பிடத்தக்கது “எனது பர்மா வழிநடைப் பயணம்.” டிசம்பர் 23, 1941 அன்று ஜப்பான் விமானங்கள் முதன்முதலாக ரங்கூன் மீது குண்டு வீசின. 80 விமானங்கள் ‘அனற்பிழம்புகள் போன்ற குண்டுகளைப் பொழிந்தன. நகரமே குலுங்கிவிட்டது’. 2000 பேர், அதிகமும் இந்தியர்கள், மாண்டு போயினர். அடுத்த மூன்று மாத காலத்தில், இன்னும் 88 முறை நகரம் குண்டு வீச்சுக்கு உள்ளாகும். நிகழப்போகும் அழிவின் வீச்சை பலரும் அறிந்திருக்கவில்லை. எனினும் பர்மாவிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற எண்ணம் இந்தியர்கள் மனதில் வலுப்பெறுகிறது. ஆயினும் குடும்பமும் தொழிலுமாக, வேர்விட்டு கிளை பரப்பிய இடத்திலிருந்து இடம் பெயர்வது பலருக்கும் எளிதாக இல்லை. சர்மாவும் குழம்புகிறார். ஆனால், நிலைமை கண்ணெதிரே சீர்கெடுகிறது. இறுதியில் மனதைத் தேற்றிக்கொண்டு அவரும் அவரது துணைவியாரும் இன்னும் இரண்டு நண்பர்களுடன் ஒரு பழைய காரில் ரங்கூனிலிருந்து புறப்படுகின்றனர். நாள்: பிப்ரவரி 21, 1942.

நான்கு நாள் பயணத்தில் மாந்தளை என்கிற நகரை அடைகின்றனர். அங்கு சில நாட்கள் தங்கிய பிறகு, மொனீவா என்கிற ஊருக்கு ரயிலில் போகிறார்கள். அது எல்லாப் பயணிகளுக்குமான ரயில் இல்லை. இடம் மாறும் அஞ்சல் துறை ஊழியர்களுக்கான போர்க் காலச் சிறப்பு ரயில். தெரிந்தவர்களின் சிபாரிசில் சர்மா இணையருக்கு அந்த ரயிலில் இடம் கிடைக்கிறது. அங்கிருந்து கலீவா என்கிற ஊருக்கு நீராவிப் படகில் போகிறார்கள். அது நெடுஞ்சாலைத் துறை ஊழியர்களுக்கானது. அங்கிருந்து டாமு என்கிற ஊருக்கு நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகப் பணியாளர்களுக்கு ஒரு லாரியும் கூலித் தொழிலாளர்களுக்கு வேறு ஒரு லாரியும் போகின்றன. இரண்டுமே திறந்த லாரிகள். சர்மாவுக்கு இரண்டாவதில்தான் இடம் கிடைக்கிறது. பாதை கரடு முரடானது. வாகனம் வசதிக் குறைவானது. கோடை வெயில் கடுமையானது. அங்கிருந்து வக்ஸீ என்கிற முகாமுக்கு காட்டு வழியில் மாட்டு வண்டியில் பயணிக்கிறார்கள். பெண்களும் சாமன்களும் வண்டியில், ஆண்கள் மலைக் காட்டில் நள்ளிரவில் வண்டியின் பின்னால் நடந்து செல்கிறார்கள். அப்போது காட்டுத்தீ பற்றிக்கொள்கிறது. அது குதிரைப் படையைப் போல் முன்னேறி வருகிறது. ஜூவாலை கண்களைக் கூச வைக்கிறது. எல்லோரும் கதி கலங்கிப் போகிறார்கள். வண்டியோட்டிகள் காற்றின் திசையறிந்து காட்டுத்தீயின் போக்கிற்கு மாற்றுத் திசையில் வண்டிகளை ஓட்டிப் பயணிகளைக் காக்கிறார்கள்.

இதன் பிறகு அவர்கள் கடக்க வேண்டியது நாகமலைத் தொடர். நாகலாந்து- மணிப்பூர் மலைவழிப் பயணம். கடல் மட்டத்திற்கு 5500 அடி உயரே ஏற வேண்டும். பிறகு இறங்க வேண்டும். ஏறுமுகம் சிரமமானது. இறங்கு முகம் ஆபத்தானது. முதலில் ‘டோலி’யிலும் (சப்பரம்), பிறகு நடந்தும், பிறகு ‘ஏணை’யிலுமாக (தொட்டில்) இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் சர்மா. அகதிகளுக்கு உதவ பிரிட்டிஷ்-இந்திய அரசு பழங்குடியினரை நியமித்திருக்கிறது. அவர்கள் அகதிகளின் சப்பரங்களையும் சுமைகளையும் தூக்கி வருகிறார்கள். பாதையின் இரு பக்கங்களிலும் வெகு ஆழமான பள்ளத்தாக்குகள், பேய்க் காற்று, குளிர், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் எல்லோரும் பயணிக்கின்றனர். வாகன வசதியும் கூலித் தொழிலாளர் உதவியும் வாய்க்காத பலர் பயணத்தின் பெரும் பகுதியை நடந்துதான் கடக்கின்றனர். ஏலாதோர் இடையில் மரிக்கின்றனர். அவர்களுக்கு எந்த ஈமச் சடங்கும் வாய்ப்பதில்லை.

வான்சிங் என்பதுதான் மலைப் பயணத்தின் கடைசி முகாம். அங்கிருந்து வடகிழக்கு மாநிலங்களின் கடைசி ரயில் நிலையமான டிமாபூர் என்கிற ஊருக்கு ராணுவ லாரியிலும், அங்கிருந்து கல்கத்தாவிற்கு ரயிலிலும் வந்து சேர்கின்றனர். நாள்: ஏப்ரல் 24, 1942.

பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் நாள் கிழமையோடு சர்மாவால் சொல்ல முடிகிறது. நாட்குறிப்பு எழுதுகிற பழக்கம் அவருக்கு இருந்தது. ஆவணப்படுத்துவதின் அவசியத்தை அவர் அறிந்திருந்தார். சர்மாவின் இன்னொரு புகழ் பெற்ற நூல் “சீனாவின் வரலாறு” (மலர் புக்ஸ், புதிய பதிப்பு, 2022). ‘ஆதிகாலத்திலிருந்து ஒழுங்கான சரித்திரங்கள் அங்கு (சீனா) எழுதப்பட்டு வந்திருக்கின்றன’ என்று அந்த நூலைத் தொடங்கும் சர்மா. ‘சீனாவின் வரலாற்று நிகழ்வுகள் கிழமை வாரியாக’ ஆவணப்படுத்தப்பட்டிருந்தன என்று வியந்து பாராட்டுகிறார். நமது வரலாறு அப்படி ஆவணப்படுத்தப்படவில்லை என்கிற குறை அவருக்கு உண்டு. அதைத் தன்னளவில் தீர்க்கும் முயற்சியை அவர் வாழ்நாள் முழுதும் மேற்கொண்டார். அதில் தலையாயது ‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ எனும் இந்த நூல்.

மாந்தளையில் தங்கியிருந்தபோது போர் மேகங்கள் ரங்கூனிலிருந்து மாந்தளையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்தப் போர்ச் சூழலின் காரணமாக அந்த நகரில் விலைவாசி உயரவில்லை. வீட்டு வாடகை மாதம் ரூ.9. உணவுப் பொருட்களும் சகாயம். ரவை, 1/2 வீசை- 4 அணா, கோதுமை 1/2 வீசை – 3 அணா (வீசை- 1.400 கிலோ, அணா- 6 காசு)

பயணம் நெடுகிலும் சர்மாவுக்குப் பலரும் உதவுகிறார்கள். அவர்களில் சிலர் அவரை நேரடியாக அறிந்தவர்கள். பலர் அவரது படைப்புகளை வாசித்தவர்கள், அல்லது அவர் ஓர் எழுத்தாளர் என்கிற அளவில் அறிந்து வைத்திருப்பவர்கள். தவிர, ‘ஜோதி’யில் எழுதிய ஒன்றிரண்டு பேர் இடையில் தோன்றி, பயணத்துக்கு உதவுகிறார்கள். நீங்கள் ‘ஹிட்லர் சர்மா’தானே என்று கேட்கிறார் ஓர் அரசு அலுவலர். ஹிட்லரைப் பற்றி சர்மா எழுதிய நூலை அவர் படித்திருக்கிறார்.

இன்னும் சிலர் அவரது ஆச்சார அனுஷ்டானங்களால் அவருக்கு அணுக்கமானவர்கள். வேறு சிலர் அதன் பொருட்டு அவரை மதிப்பவர்கள். அவரது ஒல்லியான தேகமும் கதராடையும் எளிய தோற்றமும் அவர் மீது பரிவையும் மதிப்பையும் ஏற்படுத்தியிருக்கலாம். ஒரு லாரி ஓட்டுநர் அவரைத் தந்தையைப் போல் நடத்துகிறார். மணிப்பூரில் கூலித் தொழிலாளரின் மேஸ்திரி ஒரு ‘சாது’வுக்கான மதிப்பை நல்குகிறார். சர்மா எல்லாவற்றையும் விரிவாகவும் வெளிப்படையாகவும் பதிவு செய்கிறார்.

இந்த நூல் ஒரு துயரக் கதையின் நேரடி சாட்சியம். ஒரு முதன்மை ஆவணம். இதைப் பதிவு செய்திருப்பவர் மனித நேயமும் வரலாற்று அக்கறையும் அறவுணர்வும் எழுத்தாற்றலும் மிக்க தமிழறிஞர்.

இப்படியான சிறப்பு மிக்க நூலை நல்ல அச்சோடும் அமைப்போடும் கொண்டு வருகிறது மலர் புக்ஸ். இந்த நூலின் பதிப்பாளர் ‘பரிசல்’ சிவ. செந்தில்நாதன் புத்தகங்களையே சுவாசிக்கிறவர். ஒரு தனி நபர் இயக்கமாக இடையறாது இயங்கி வருபவர். தமிழ்ச் சமூகத்திற்கு பல நல்ல நூல்களைத் தொடர்ந்து வழங்கி வருபவர். இந்த முன்னுரையை என்னை எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்டவரும் அவர்தான். அவருக்கு என்னுடைய நன்றிகள். ‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ தமிழின் கிளாசிக் நூல்களுள் ஒன்றாக விளங்கும். இந்த நூலை நல்லுலகம் ஆதரிக்கும் என்று நம்புகிறேன்.

எனது பர்மா வழிநடைப் பயணம்
வெ.சாமிநாத சர்மா,
புதிய பதிப்பு, 2025
பரிசல் புத்தக நிலையம்,
பம்மல், சென்னை-75.

விலை: ரூ.240/-
நூலைப் பெற: 9382853646, 8825767500 (Gpay)

கட்டுரையாளர்: மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். பிரிட்டனின் சார்டட் பொறியாளராகவும் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளராகவும் பட்டம் பெற்றவர். பன்னாட்டு அரசியல், பொறியியல், சமூகம், கல்வி, இலக்கியம் சார்ந்து ஏழு நூல்கள் எழுதியுள்ளார்.

தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share