MGNREGA திட்டம் வாழ்வாதாரத்தை வழங்கியதோடு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர், பெண்கள் ஆகியோரிடையே பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது; இது பழமைவாத அதிகார அமைப்புகளைப் பலவீனப்படுத்தியதுடன், பிறரைச் சார்ந்து வாழும் நிலையையும் மாற்றியது.
சி.ஆர். யது
கடந்த வாரம் நரேந்திர மோடி அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) வெறும் வேலைவாய்ப்புத் திட்டம் மட்டுமல்ல. 2005ஆம் ஆண்டு ஊரக இந்தியா விவசாய நெருக்கடியிலும் சுருங்கிவரும் வேலைவாய்ப்புகளாலும் தத்தளித்துக்கொண்டிருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், வரலாற்று ரீதியாக ஊரகச் சமூக வாழ்க்கையின் அடையாளமாகவே இருந்த அதிகார உறவுகளைப் பலவீனப்படுத்தியது. ஆதிக்கச் சாதியினரும் வசதி படைத்த வர்க்கத்தினரும் ஒடுக்கப்பட்ட சாதித் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் பிறரைச் சார்ந்து வாழும் நிலையைக் கணிசமாகக் குறைத்தது.
உழைக்கும் ஏழை மக்களின் நலன்களைப் புறந்தள்ளி, நவதாராளவாதத் திட்டங்கள் இந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைத்துக்கொண்டிருந்த காலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. “வேலையில்லா வளர்ச்சி” (Jobless growth) நிலவிய அந்தச் சூழலில், வேலை கேட்கும் ஒவ்வொரு ஊரகக் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் உறுதி அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்னும் திட்டம், அவர்களுக்கு வருமானத்தை அளித்ததோடு நில்லாமல், அன்றாடப் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையில் தொழிலாளர்களின் குரலை வலுப்படுத்தியது.

பல ஊரகக் குடும்பங்களுக்கு, குறிப்பாகக் கூலித் தொழிலையே நம்பியிருப்பவர்களுக்கு, இத்திட்டம் முக்கியமான நிலைத்தன்மையை வழங்கியது. இது இந்திய உழைக்கும் வர்க்கத்திற்கு, குறிப்பாகப் பெண்கள், விளிம்புநிலை சாதிப் பிரிவினருக்குப் பெரிய நிம்மதியாக அமைந்தது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பொருளாதார விளைவுகள் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இது நிலமற்ற தொழிலாளர்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரித்தது; நில உரிமையாளர்களிடம் ஊதியத்திற்காகப் பேரம் பேசும் அவர்களின் வலிமையை மேம்படுத்தியது. குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்ததன் மூலம், பல மாநிலங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினசரி வருவாய் அதிகரித்தது. ஆழமான சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தியது.
ஊரகச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம்
சீனா அல்லது பல கிழக்கு ஆசிய நாடுகளைப் போலல்லாமல், இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு அர்த்தமுள்ள நிலச் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறிவிட்டது. இதன் விளைவாக, சாதியையும் நில உரிமையையும் அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய அதிகாரக் கட்டமைப்புகள் ஊரகப் பகுதிகளில் பெருமளவு மாறாமல் அப்படியே இருந்தன. விளிம்புநிலைச் சாதியைச் சேர்ந்த உழைப்பாளியின் அன்றாட வாழ்க்கையை, குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பல அடுக்குகள் கொண்ட ஒடுக்குமுறைகளே தீர்மானித்துவந்தன.
இருப்பினும், ஊரகச் சமூகம் தேக்க நிலையில் இருக்கவில்லை. இந்தியா முழுவதும் உழைக்கும் வர்க்கத்தினரும் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினரும் தங்களின் உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் போராடிவருகின்றனர். நகரப்புறங்களில் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் பெருகியதால் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்களைச் சார்ந்து இருந்த பழைய நிலை பலவீனமடையத் தொடங்கியது.
சமூக மாற்றம் ஏற்கனவே தொடங்கி, அது நிலைபெறக் காத்திருந்த அந்தச் சரியான தருணத்தில்தான் MGNREGS அறிமுகப்படுத்தப்பட்டது.
மாற்று வேலைவாய்ப்பு ஆதாரத்தை வழங்கியதன் மூலம், நிலமற்ற தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை இத்திட்டம் அதிகரித்தது. பல கிராமங்களில், ஆண்டு முழுவதும் சேவை செய்ய வேண்டிய கடமையைக் கொண்ட சாதி அடிப்படையிலான படிநிலை உறவான ‘ஜஜ்மானி முறை’ (jajmani system) பலவீனமடையத் தொடங்கியது.
நீண்டகாலக் கடப்பாடுகளால் குறிப்பிட்ட முதலாளிகளிடம் பிணைக்கப்பட்டிருந்த மாடு மேய்ப்பவர்கள், இதர பண்ணைத் தொழிலாளர்கள் ஆகியோர் தங்களின் வழக்கமான பணிகளுக்குத் திரும்ப மறுத்து, அதற்குப் பதிலாக MGNREGS வேலைத்தளங்களில் வேலை செய்தனர். குறைந்த ஊதியம் கொண்ட, அவமானங்களுடன் கூடிய விவசாய வேலைகளைக் காட்டிலும் அரசு வேலைவாய்ப்பைத் தொழிலாளர்கள் விரும்பியதால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுவதாக நில உரிமையாளர்கள் புகார் கூறினார்கள்.

ஆதிக்கத்தையும் கட்டாயங்களையும் அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் உறவுகள் மேலும் சிதைவடையத் தொடங்கின. சாதிப் படிநிலை, சமூகச் சார்பு, வேலை, கடன் அல்லது அன்றாட ஆதரவை நிறுத்திவிடுவோம் என்ற மிரட்டல்கள் மூலமே இத்தகைய உறவுகள் நீடித்தன. இவை தொழிலாளர்களுக்கு ஊதியம் அல்லது வேலை நிலைமைகள் குறித்துத் தேர்வு செய்யும் உரிமையைத் தராமல் வைத்திருந்தன.
சமூக விளைவுகள்
இந்தப் பின்னணியில் MGNREGS ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. இதன் சமூக விளைவுகள் மிக விரிவானவை. தாழ்த்தப்பட்ட சாதித் தொழிலாளர்கள் தங்களின் விருப்பங்களைத் தேர்வு செய்யவும், ஊதியம் குறித்துப் பேரம் பேசவும், நீண்டகாலச் சமூக ஒடுக்குமுறையை எதிர்க்கவும் தேவையான திறனைப் பெற்றனர். குறிப்பாக, பெண்களே இதன் முக்கியப் பயனாளிகளாக உருவெடுத்தனர். இத்திட்டத்தின் கீழான ஊதியப் பணி பல பெண்களுக்குச் சொந்த வருமானத்தைத் தந்தது. கையில் பணம் இருந்ததால் தங்களுக்குத் தேவையானதை வாங்கிகொள்வதற்கான வாய்ப்பு பெருகியது. ஆண்களைச் சார்ந்து இருக்கும் நிலையைக் குறைத்தது. குடும்ப வருமானத்தில் அவர்களின் பங்களிப்பு வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது.
பல பிராந்தியங்களில், பொது விநியோகத் திட்டம் (PDS), சுய உதவிக்குழுக்கள் (SHG) போன்ற மற்ற நலத்திட்டங்களுடன் இணைந்து MGNREGS சிறப்பாகச் செயல்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தின.
பல விவசாயத் தொழிலாளர்களுக்குப் பண்ணை வேலை மூலம் கிடைத்த வருமானம் அன்றாடத் தேவைக்கே பயன்படுத்தப்பட்டது; ஆனால் MGNREGS மூலம் கிடைத்த வருவாய் சேமிக்கவும் கடன்களை அடைக்கவும் பயன்பட்டது. திட்டமிடுதல், சுயசார்பு, பண நெருக்கடிகளைச் சமாளிக்கும் வலிமை ஆகியவற்றை உருவாக்கியது.
இவ்வாறு MGNREGS ஊரகப் பகுதிகளில் அமைதியான சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. இது அதிகாரப் படிநிலைகளையோ சமத்துவமின்மையையோ முழுமையாக ஒழித்துவிடவில்லை; ஆனால் அவற்றைச் சிதைத்தது. நீண்டகாலமாக மறுக்கப்பட்ட கண்ணியம், பேரம் பேசுதல், மறுப்பு தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அளித்தது.

இத்திட்டத்தை முடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்காது. இது பெண்கள், நிலமற்ற தொழிலாளர்கள், விளிம்புநிலைச் சாதிப் பிரிவினரைத்தான் மிக மோசமாகப் பாதிக்கும். ‘திறன் மேம்பாடு’ அல்லது ‘சீர்திருத்தம்’ என்று இப்போது சொல்லப்படுவது, உழைப்பு, வாழ்வாதாரம் ஆகியவைமீதான உரிமையை மீண்டும் நிலப்பிரபுக்களிடமும் ஆதிக்கச் சாதிகளிடமும் ஒப்படைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இத்தகைய புறக்கணிப்புகளின் மீது கட்டமைக்கப்படும் எந்தவொரு ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ கனவும் சமத்துவமின்மையைத் தீர்ப்பதற்குப் பதில், அதை மேலும் ஆழப்படுத்தவே செய்யும்.
கட்டுரையாளர்: சி.ஆர். யது, பெங்களூருவில் உள்ள WELL Labs-ல் போஸ்ட்டாக் டோரல் ஃபெலோ ஆக உள்ளார்.
