–ராஜ திருமகன்
பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில்… இல்லை இல்லை, இந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்திலுமே, ஒரு கேரக்டர் வரும் . அந்த கேரக்டர் படத்தில் வந்த உடனேயே அந்த கேரக்டரின் முடிவு என்ன என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்து விடும் .
கதாநாயகியை திருமணம் செய்ய வந்து கடைசியில் ஹீரோவிடம் ஹீரோயினை தாரை வார்த்து தண்ணீர் தெளித்து விட்டு சோகமாகவோ அல்லது டேக் இட் ஈசியாகவோ மீண்டும் ஃபிளைட் ஏறிப் போகும் வெளிநாட்டு மாப்பிள்ளை கதாபாத்திரம்தான் அது. .
மாறாக வெளிநாட்டு மாப்பிள்ளை கதாநாயகியை திருமணம் செய்து கொள்வது போல படம் எடுத்தால் அந்த டைரக்டரையும் அந்த பிளைட்டிலேயே ஏற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவார் தயாரிப்பாளர் .
அதே போல்தான் முறைமாமன் கேரக்டரும்.
நடிக்கும் நடிகர்களைப் பொறுத்து அது வெளிநாட்டு மாப்பிள்ளையை விட சிறப்பாகவோ அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளையை விட பாவமாகவோ இருக்கும்
கடலோரக் கவிதைகள் ராஜா , ரமேஷ் அரவிந்த் இப்படி நிறைய வெளிநாட்டு மாப்பிள்ளைகள் தமிழ் சினிமாவில் உண்டு.
அவர்களில் ஒருவர்தான் கார்த்திக் குமார்
‘சுச்சி லீக்’ புகழ் சுசித்ராவை திருமணம் செய்து விவாகரத்தும் செய்து கொண்ட கார்த்திக் குமார், அந்தக் கல்யாணத்துக்கு ஐந்து வருடம் முன்பு மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார்.
சூப்பர் சீனியர் ஹீரோஸ் என்ற – சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட படத்தை இயக்கியதோடு, தர்ம யுத்தம் என்ற டிவி சீரியலிலும் அவர் நடித்திருந்தாலும் , கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் சினிமாவில் அவர் நடித்த இருபது படங்களில் பெரும்பாலும் அவருக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அல்லது முறைக்கக் கூடத் தெரியாத முறைப் பையன் கேரக்டர்கள்தான்
இப்போது விஜய் டிவியிலும் ஹாட் ஸ்டாரிலும் வரும் ஹார்ட் பீட் சீசன் இரண்டில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்படுவதோடு அவரது கேரியருக்கு உதவும் என்கிறார்கள். உதவட்டும்.
கடலோரக் கவிதைகள் ராஜா என்ற வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு , ‘சக்தித் திருமகன் படத்தின் வில்லன் ‘ என்ற கல்யாணம் நடந்தது.
ரமேஷ் அரவிந்த் என்ற வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பல படங்களின் ‘இயக்குநர்’ என்ற திருமணம் நடந்தது .
கார்த்திக் குமாருக்கும் அப்படி எதாவது திருமணம் நடக்கட்டும்
இதைப் படித்தால் சுச்சி லீக் சுசித்ரா டென்ஷனாக மாட்டார் என்று நம்புவோம் !
