டி.எம். கிருஷ்ணா The Pahalgam Massacre
கொடூரமான பயங்கரவாதச் செயல்!
இந்த நேரத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ன செய்திருப்பார்? கல்கத்தா, நவகாளி, பிகாரில் செய்ததுபோல், நிச்சயமாக பெஹல்காமுக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை, அவர்கள் எங்கிருந்தாலும் அரவணைத்து, அவர்களுடன் பிரார்த்தனை செய்திருப்பார். The Pahalgam Massacre
வேதங்களிலிருந்தும் குர்ஆனிலிருந்தும் பிரார்த்தனை கீதங்களை ஓதுவதை வலியுறுத்தியிருப்பார். பெஹல்காமில் தங்கியிருப்பார். அதன் சரிவுகளிலும் தெருக்களிலும் நடந்து, ஒவ்வொரு வீட்டிற்கும் கடைக்கும் சென்று, மக்கள் சொல்வதைக் கேட்பார். அவர்களின் கைகளைப் பிடித்து, அவர்களின் பயத்தையும் பதற்றத்தையும் சமாளிக்க அவர்களுக்கு உதவியிருப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கான சிகிச்சையில் பேதம் கூடாது என்று கூறியிருப்பார். The Pahalgam Massacre

காந்தியின் அன்பு அச்சமற்றது. சமூகம் எதிர்பார்க்கும் கடமைகளில் அவர் அக்கறை கொள்ளவில்லை. மனிதநேயத்தை உணரச் சமூக வடிவமைப்புகள் தடையாக இருப்பதாக அவர் கருதினார். பேதங்களைக் கடந்த இந்த அக்கறைதான் அவருடன் உடன்படாதவர்கள் உட்படப் பலரை நெகிழவைத்தது. அவர் படுகொலை செய்யப்பட்டு 77 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் துயரமான தருணத்தில் என் மனம் அவரைத் தேடிக்கொண்டிருந்தது.
பெஹல்காமில் நடந்தது கொடூரமான பயங்கரவாதச் செயல். அதில் இந்துப் பொதுமக்கள், அப்பாவிச் சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயன்றபோது கொல்லப்பட்ட குதிரை ஓட்டுநரான முஸ்லிமை நாம் மறக்க முடியாது. பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனிநபர்களின் மதத்தைப் பொதுவாக நான் குறிப்பிட மாட்டேன். ஒவ்வொரு மனிதரும், அவர் எந்தச் சமூகப் பிரிவைச் சார்ந்திருந்தாலும் விலைமதிப்பற்றவர். The Pahalgam Massacre
பாதிக்கப்பட்டவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், யூதர், சீக்கியர், அல்லது நாத்திகராக இருந்தாலும் சரி, ஒரு உயிரைப் பறிப்பது நம் ஆன்மாக்களைத் துளைத்துப் பரிதவிப்பை ஏற்படுத்த வேண்டும். செய்வதறியாமல் தவிக்க வேண்டும். தாங்கள் குறிப்பாக யாரைக் குறிவைக்கிறோம் என்பது குறித்த எந்த ஐயமும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இல்லை என்றாலும், நமது வருத்தங்களும் பரிவும் கொலை செய்யப்பட்டவர்களின் சமூக-மத நிலைப்பாட்டின் அடிப்படையில் இருக்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களின் அடிப்படையில் நமது வேதனை அமையக் கூடாது. ஒவ்வொரு வன்முறை சம்பவத்திற்குப் பிறகும் புள்ளிவிவரங்களை ஒப்பிடக் கூடாது.
பயங்கரவாதிகளுக்கு எந்த மதமும் இல்லை!
எவ்வளவு சாதாரணமான கூற்றாகத் தோன்றினாலும், நான் அதை மீண்டும் கூறுவேன். பயங்கரவாதிகளுக்கு எந்த மதமும் இல்லை. அவர்களின் மதம் பயங்கரவாதம். அவர்கள் எந்த மதத்தையும் சார்ந்திருப்பதாகக் கூறலாம். அதன் பெயரால் செயல்படலாம். அவர்களுக்கு அவ்வாறு செய்ய உரிமை இல்லை. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அல்லது அதற்கு எதிர்வினையாற்ற எந்த நாடும் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். வன்முறை, இனவாத நச்சு, மதவெறி ஆகியவற்றை நிராகரிக்கும் மனிதர்களாக நாம் அதைச் செய்ய வேண்டும். The Pahalgam Massacre

ஆனால் இன்று, பாதிக்கப்பட்டவர்களின் மத அடையாளத்தைக் குறிப்பிடாமல் இந்த உரையாடலைத் தொடங்க முடியவில்லை. அவ்வாறு செய்வதன் மூலம், ஒரு குழுவுடனான நமது உறவை வெளிப்படுத்துகிறோம், மற்றொரு குழுவை நோக்கி விரல்களை நீட்டிக் குற்றம் சுமத்துகிறோம், அல்லது இரண்டுக்குமிடையே சமநிலையை ஏற்படுத்துகிறோம். மூன்று நிலைப்பாடுகளும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தப்படுகின்றன.
துக்கம் சக்திவாய்ந்த மனித அனுபவம்!
இந்த நிர்ப்பந்தத்தின் மறுபக்கம் எதிர்பார்ப்புகள். ஒவ்வொரு கண்டனமும் மதிப்பீட்டுக்கு உள்ளாகிறது. வருத்தத்தை வெளிப்படுத்தும் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால், துக்கத்தின் வெளிப்பாடு போதுமானதாகக் கருதப்படுகிறது. அவரே குற்றம் இழைத்தவரின் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், கண்டனம் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இருக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அவர் ஒதுக்கி வைக்கப்படுவார். இத்தகைய கவனமான செயல்பாடு நமது பிரக்ஞையில் ஊடுருவியவுடன், துக்கம் மூடுதிரையாக மாறி, நம் மனதில் உள்ள பிரிவை, பிளவை மறைக்கிறது.
துக்கம் என்பது சக்திவாய்ந்த மனித அனுபவம். அது நம்மை உண்மையிலேயே படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. துக்கத்தின் தருணத்தில், சமூக அடையாளங்கள் மறைந்து, வேறுபாடுகள் உதிர்ந்துபோகும். துக்கம் மனிதர்களை ஒன்றிணைக்கிறது. மகிழ்ச்சியால்கூட அந்த அளவுக்கு ஒன்றிணைக்க முடியாது. நாம் ஒன்றாகச் சேர்ந்து சிரிக்கும்போதுகூட, நமக்கிடையிலான பிரிவினைக் கோடுகள் மாறாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. The Pahalgam Massacre
மகிழ்ச்சியின் தருணத்திலிருந்து விலகி நம்முடைய கூண்டிற்குள் நாம் சென்றுவிடலாம். ஆனால் அழும்போது நாம் உடைந்துபோகிறோம். அருகில் இருப்பவர்களைக் கட்டிப்பிடித்து, ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறுகிறோம். தன்னிச்சையான இந்தப் பகிர்வில் எந்த தீர்ப்பும் இல்லை. துக்கத்தின் கூட்டுத்தன்மையில் நாம் இணைந்தவுடன், அதன் உணர்ச்சிப்பூர்வமான ஒற்றுமையிலிருந்து நம்மைப் பிரித்துக்கொள்வது மிகவும் கடினம். இந்த அனுபவத்தை யாராலும் நடித்துக்காட்ட முடியாது. இந்த ஒன்றிணைப்பிலிருந்துதான் உதவி பிறக்கிறது. The Pahalgam Massacre

பயங்கரவாதச் செயல் நிகழ்ந்தபோது பெஹல்காமிலும் அதைச் சுற்றிலும் உள்ள உள்ளூர்வாசிகள் இந்த அவசர உணர்வோடுதான் உதவினார்கள். இந்தச் சம்பவம் தங்களுக்கு என்ன செய்தது என்பதை அப்பகுதி மக்கள் சொல்வதைக் கேட்கும்போது அந்த உணர்வைத்தான் நாம் காண்கிறோம். இந்தச் சம்பவம் தங்களின் நிலத்தில் நடந்தது குறித்து அவர்கள் படும் வேதனையும் அவமான உணர்வும் அவர்கள் குரல்களில் எதிரொலிக்கின்றன. கெடுவாய்ப்பாக, பஹல்காமைச் சுற்றி வாழ்பவர்கள் அல்லது அந்தக் கொடூரச் செயலைக் கண்டவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
அன்பை எங்கே கண்டுபிடிப்பது?
இந்த விஷயத்தில் சொல்வதற்குத் தங்களுக்கு நிறைய இருக்கிறது என்று கருதும் நம்மில் பெரும்பாலோர், நான் உட்பட, காஷ்மீரில் வசிப்பவர்கள் அல்ல; பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்களும் அல்ல. ஆனாலும், நாம் கேள்விப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை நமக்கு ஏற்படுத்துகின்றன. ஆனால் அந்த அதிர்ச்சியை நாம் என்ன செய்கிறோம்? The Pahalgam Massacre
இதுபோன்ற சம்பவங்களால் ஏற்படும் அதிர்ச்சி அனைவருக்கும் பொதுவானது. அந்தப் பொதுத்தன்மையை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். உயிரிழப்பு தரும் வேதனையைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்கு முன்புவரை தங்களைச் சுற்றியுள்ள அழகை ரசித்த மக்கள் பயங்கரவாதத்தின் கொடூரத்தால் மறைந்துவிட்டார்கள் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளப் போராட வேண்டும்.
அதற்கு பதிலாக நாம், மனிதர்களை மறந்து, குழுக்கள், பிரிவுகளுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறோம். கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகிறோம். நமது துக்கம் எல்லைகளை மீறும்போது மற்றவர்களின் துக்கத்தில் மூழ்கி, எல்லைகளைக் கடந்து அனுதாபம் கொள்ள முடியாது; பாதிப்புக்குள்ளான அந்தத் தருணத்தில் எந்த நிபந்தனையுமின்றிப் பங்கேற்க முடியாது. The Pahalgam Massacre

சொந்தம் என்பது இரண்டு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் இந்துவாக இருந்தால், பாதிக்கப்பட்டவர்களை இந்துவாக நிலைநிறுத்துவது வலியைப் பகிர்ந்துகொள்ள அவசியமாகக் கருதப்படுகிறது. மத அடையாளம் குறிப்பிடப்படாதபோது, துக்கத்தின் வெளிப்பாடு அரை மனதுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்துக்கள் ‘மற்றவர்களைப்’ போல ‘நம் சொந்தங்களை’ கவனித்துக்கொள்வதில் ஒன்றுபடுவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, ஒரு துயர நிகழ்வு மத ஒற்றுமையை உருவாக்கப் பயன்படுகிறது. இந்தச் செயலைக் கண்டிப்பவர்கள் அதே சமயத்தில் இஸ்லாமிய நம்பிக்கையையும் சமூகத்தையும் கண்டிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாம் நம்மையும் மற்றவர்களையும் இப்படித்தான் பார்க்கிறோம் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, வெவ்வேறு நபர்களுடன் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும். நமது தொடர்புகள் அனைத்தும் சமூகப் பிரிவுகள் சார்ந்த வகைப்பாட்டின் மூலம் வழிநடத்தப்படும்போது அவற்றில் எந்த உண்மையும் இருக்க முடியாது. அப்படியானால், அன்பை எங்கே கண்டுபிடிப்பது?
தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ஒரு மேற்கோளுடன் இதை முடிக்கிறேன். ஒருமுறை, காதலைப் பற்றி அவர் இவ்வாறு கூறினார்: “அன்பு என்பது சிந்தனை அல்ல, அன்பு என்பது நினைவு அல்ல… அன்பு அல்லாத அனைத்தையும், பொறாமை, வெறுப்பு, வன்முறை என அனைத்தையும், நாம் மறுக்க வேண்டும்.”
நன்றி: தி டெலிகிராஃப்
தமிழில்: சுப்ரஜா
கட்டுரையாளர் குறிப்பு:

டி.எம்.கிருஷ்ணா, கர்நாடக இசைக் கலைஞர். ‘மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்: செபாஸ்டியன் குடும்பக் கலை’, ‘கர்நாடக இசையின் கதை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.