சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கத்தில் ஆர்வம் காட்டினாலும் இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம் என்பது உணர்வுப்பூர்வமானதாகவும் பார்க்கப்படுகிறது. தனது அடுத்த தலைமுறைக்கு சேமித்து வைத்த தங்க நகையை கொடுப்பது குடும்பங்களில் கௌரவமாகவும் கருதப்படுகிறது. இதுவும் இந்திய குடும்பங்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்ட காரணமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஒவ்வொரு இந்திய குடும்பமும் இந்தியாவின் பொருளாதாரத்தை மறைமுகமாக தாங்கிப்பிடிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் உண்மைதான் என்பதற்கு உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விபரங்களே சாட்சி.
இந்தியா ரிசர்வ் வங்கி 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 880 டன் தங்கத்தை வைத்திருந்தது. இது முந்தைய காலாண்டான முதல் காலாண்டில் 879.60 டன்களாக இருந்த நிலையில் இருந்து அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய குடும்பங்களிடம் சுமார் 25,000 டன் தங்கம் இருந்ததாகவும், 2025 அக்டோபர் 13 அன்று வெளியான அறிக்கையின்படி, இந்த அளவு 34,600 டன்னாக அதிகரித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தங்க நாணயமாகவோ, கட்டியாகவோ அல்லது ஆபரணமாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. இது உலக மத்திய வங்கிகளின் மொத்த தங்க இருப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசீது முக்கியம்
இந்த நிலையில் ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என வருமான வரித்துறையின் சில அறிவுறுத்தல்கள் சமூக வலைத்தளங்களில் பரவாலாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில் ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்புகள் இல்லை. அதேசமயம் அந்த நகைகளுக்கான மூல ஆதாரத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் இருக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டால் சந்தேகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் படி பாதுகாப்பான அளவு தங்கம் என்பது திருமணமான ஒரு ஆண் அல்லது திருமணம் ஆகாத ஒரு ஆண் 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் அது வழக்கமான குடும்ப நகைகள் என கருதப்படும்.
அதேபோல் திருமணமான பெண்கள் 500 கிராமும், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராமும் வைத்திருக்கலாம். இந்த அளவிற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் அதை நிரூபிக்க தேவையான மூல ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். அவை இருக்கும் பட்சத்தில் நாம் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் பிரச்சனை இல்லை. அதேசமயம் அன்பளிப்பாக வரும் நகைகளுக்கும் நாம் ஆவணங்களை பராமரிப்பது நல்லது.
