தீபாவளி ரிட்டர்ன் சிறப்பு பேருந்துகள்.. மதுரையில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

Published On:

| By Mathi

Minister SS Sivasankar

தீபாவளி பண்டிகை முடிந்துசென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு திரும்புவோருக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் குறித்து மதுரையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று (அக்டோபர் 21) திடீர் ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொட்டும் மழைக்கிடையே வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்றனர்.

ADVERTISEMENT

பண்டிகைகாலத்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்பியதால் சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கி இருந்தன. அதேபோல பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம், ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை ஆகியவை தொடர்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பண்டிகை முடிந்து பணியிடங்களுக்கு திரும்புவோருக்கான சிறப்பு பேருந்துகள் வசதி குறித்து மதுரையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று திடீரென ஆய்வு நடத்தினார்.

ADVERTISEMENT

மதுரை எம் ஜி ஆர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார்,

மேலும் அனைத்து வழித்தடத்திலும் சிறப்பு பேருந்துகள் இயக்கங்கள் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். முன் பதிவு செய்துள்ள பயணிகளிடையே பேருந்து வசதிகள் குறித்து கருத்துக்களையும் அமைச்சர் சிவசங்கர் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் V.சரவணன், மதுரை மண்டல பொது மேலாளர் K. மணி மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share