ADVERTISEMENT

ஆடுகளமா? போர்க்களமா?

Published On:

| By Minnambalam Desk

The cricket field has been turned into a warfield between INDvsPAK

ஆசியக் கோப்பைப் போட்டியின்போது நடந்த சம்பவத்தின் பிரச்சினை அதன் உறுதியற்ற தன்மைதான். போட்டி குறித்து இந்திய அரசுக்கு ஏதேனும் சிக்கல் இருந்திருந்தால், போட்டியில் இந்திய அணி பங்கேற்க அனுமதித்திருக்கக் கூடாது.

டி.எம். கிருஷ்ணா

ADVERTISEMENT

கிரிக்கெட் மைதானத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் மரியாதைகளும் வாழ்த்துகளும் சர்ச்சைக்குரிய, அரசியல் சார்ந்த விஷயமாக மாறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். களத்தில் ஏற்பட்ட சண்டைகள் மைதானத்திற்கு அப்பாலும் சில சமயம் தொடர்வதுண்டு. துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வீரர்கள் எதிரணியினரை வாழ்த்த மறுத்ததுண்டு. ஆனால் கிரிக்கெட் தொடர்பான சண்டைகள் விரைவாகத் தீர்க்கப்பட்டன. ஒரு தொடர் முழுவதும் பதற்றங்கள் அதிகமாக இருந்தபோதிலும், இறுதியில் நிலைமை சீராகிவிடும்.

ஆனால் இது முழு உண்மை அல்ல. கிரிக்கெட் எப்போதும் அரசியலுடன் இணைந்துள்ளது. நிறவெறியின் காரணமாக பல தசாப்தங்களாகத் தென்னாப்பிரிக்காவை புறக்கணித்ததும், தடை இருந்தபோதிலும் அங்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் மீதான தடையும் அரசியல் நடவடிக்கைகள். மற்ற வகை அரசியலும் வெளிப்பட்டுள்ளன. ஃபயர் ஆஃப் பாபிலோன் என்ற ஆவணப்படத்தில், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் எழுச்சியை நாம் காண்கிறோம்.

ADVERTISEMENT

மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர்களுக்கு இது வெறும் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது மட்டுமல்ல என்பதை ஆவணப்படத்தின் தொடக்கத்திலேயே நாம் உணர்கிறோம். மேற்பரப்புக்குக் கீழே, சமூக-அரசியல் கூறுகள் இயங்கிக்கொண்டிருந்தன. கிரிக்கெட் உலகத்தை வெல்வதற்கான அவர்களின் ஆசை, ஒரு அடையாளத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், காலனித்துவ எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்பு அறிக்கையாகவும் இருந்தது. கிரிக்கெட் மைதானத்தில் நடந்தவற்றின் விளைவாக அரசியல் விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. 1932-33ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த பாடிலைன் தொடர், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளைப் பாதித்தது.

ஆனால் துபாயில் நடந்தது வித்தியாசமானது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும், சில மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கும் மத்தியில் சர்வதேசப் போட்டியில் விளையாட இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன. இந்திய அணி பங்கேற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது. விளையாட்டுக்குப் பிறகு, இந்திய அணி அதன் எதிரணியினருடன் கைகுலுக்க மறுத்துவிட்டது. பின்னர் இந்திய அணித் தலைவர், பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கும், ஆயுதப் படைகளுக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
திட்டமிட்ட நாடகம்

இந்தச் செயல்கள் அனைத்தும் வெளிப்படையாக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. சூர்யகுமார் யாதவ் தனக்குக் கூறப்பட்டதைச் செய்ததால், அவரை நான் குற்றம் சொல்ல மாட்டேன். வெளிப்படையான வணிகக் காரணங்களுக்காக விளையாடிவிட்டு, பின்னர் உயிர் இழந்தவர்களைப் பற்றிக் கவலைப்படுவதுபோல் நடந்துகொள்வது, இறந்தவர்களை இழிவுபடுத்துகிறது; நடந்த அனைத்தின் தீவிரத்தையும் குறைக்கிறது. இந்தச் சம்பவம், இந்திய அரசாங்கம் வெளித்தோற்றத்தைப் பற்றி மட்டுமே கவலை கொள்கிறது என்பதையும், இத்தகைய குழந்தைத்தனமான சமிக்ஞைகள் தன் குடிமக்களைத் திருப்திப்படுத்தப் போதுமானது என்று அது நம்புகிறது என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

இந்தியா ஆட்டத்தில் தோற்றிருந்தால், அணித் தலைவர் என்ன செய்திருப்பார்? பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களைக் கவுரவிப்பதிலும், ஆயுதப் படைகளை மதிப்பதிலும் அது கூட்டுத் தோல்வியாக இருந்திருக்குமா? தனது நாட்டுக்குத் தோல்வியைக் கொடுத்ததற்காக யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிசிசிஐ கேட்டிருக்குமா?

கிரிக்கெட்டும் அரசியலும்

இந்திய அணியின் நடவடிக்கைகளை விமர்சித்த பலரும், ‘விளையாட்டை அரசியல்மயமாக்க வேண்டாம்’ என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அது சரியல்ல. சுனில் கவாஸ்கர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறியதுபோல, கிரிக்கெட் எப்போதும் அரசியல் சார்ந்ததாகவே இருந்துள்ளது. துபாய் சம்பவத்தின் சிக்கல் அதன் தெளிவற்ற தன்மையில்தான் உள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து இந்திய அரசுக்கு ஏதேனும் சிக்கல் இருந்திருந்தால், போட்டியில் அணி பங்கேற்க அனுமதித்திருக்கக் கூடாது.

இந்தச் சம்பவம் கிரிக்கெட் – அல்லது வேறு எந்த விளையாட்டும் – உண்மையிலேயே நாடுகளை ஒன்றிணைக்க முடியுமா என்ற பெரிய கேள்வியையும் எழுப்புகிறது. எனக்கு நினைவிருக்கும்வரை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிகள் எப்போதும் போராகவே இருந்துள்ளன. தனிப்பட்ட அளவில், கிரிக்கெட் வீரர்கள் ஒருவருக்கொருவர் சிறந்த உறவுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு விளையாட்டு என்பது அதற்கும் மேலான ஒன்று என்பது தெரியும். தோல்விக்குப் பிறகு கிரிக்கெட் வீரர்களின் வீடுகள் மீது நடக்கும் தாக்குதல்களின் எண்ணிக்கையே அதற்கான சான்று.

வெற்றி என்னும் வெறி

விளையாட்டின் அடிப்படைத் தன்மையே அதை ஒரு பதற்றமான போட்டி என்பதைத் தாண்டி வேறு எதையும் சாத்தியமற்றதாக ஆக்குகிறது. எளிமையாகச் சொல்வதானால், விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறவே விளையாடுகிறார்கள். வெற்றி என்பது வெறும் லட்சியக் கனவோ அல்லது அரூபமான உணர்வோ அல்ல. விளையாட்டு வீரர்களின் மனதில் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சொல்லிவிட முடியாது. விதிகளுக்குட்பட்டு விளையாடினாலும், வெற்றி என்பது மற்றவரைத் தோற்கடிப்பதுதான். விதிகளின் விளிம்பில் இருக்கும் சில வழிமுறைகளும் உள்ளன. அவை விளையாட்டின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் (எதிரணியினரை வெறுப்பேற்றுதல்) என்பது ‘மனோ ரீதியான சமர்’ என்று நியாயப்படுத்தப்படுகிறது. வாய்மொழிப் பரிமாற்றங்கள் கோபமாகவும் துஷ்பிரயோகமாகவும் விரைவாக மோசமடைவதையும் நாம் பார்த்துள்ளோம். அப்போதும், வீழ்ச்சியின் அளவு மட்டுமே கேள்விக்குட்படுத்தப்படுகிறது, அந்த முறை கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை. சில விளையாட்டுகள் வன்முறையாகவும் மாறியுள்ளன.

‘வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதற்கான வெறி’ (‘killer instinct’) என்ற சொல்லாடலில் வெளிப்படுத்தப்படும் வெறித்தனமான ஆசையிலிருந்து இவை அனைத்தும் உருவாகின்றன.
இந்த வெறி தனிப்பட்ட திருப்தியின் தேவையிலிருந்து மட்டும் பிறக்கவில்லை. ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் வெற்றி பெறத் தூண்டும், அவர்களின் ஆசையை ஆழப்படுத்தும் அடையாளமாகத் தேசியம் உள்ளது. ஒவ்வொரு குடிமகனிடமும் கலாச்சார ரீதியாக வேரூன்றிய இந்த புவி-அரசியல் கட்டுமானம், விளையாட்டுக் களத்தில் உள்ள சூழ்நிலையை மோசமாக்குகிறது. ஒருவர் தனது நாட்டுக்காக விளையாடுவதில் பெருமைப்படுவதைப் பற்றி விளையாட்டு வீரர்கள் பேசுவதை நாம் கேட்கிறோம். அந்த உணர்வு மிகவும் தீவிரமானது. அதனுடன் நன்றியுணர்வு, விசுவாசம், பாதுகாப்பு உணர்வு, பாதுகாப்பு, அழுத்தம் போன்ற உணர்வுகளின் தொகுப்பு வருகிறது.

போட்டிக்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படும் ஒவ்வொரு முறையும், வீரர்களின் கண்களில் பதற்றத்தை நாம் உணர முடியும். ஒரு தோல்வி முழு தேசத்தையும் அவர்கள் ஏமாற்றியதுபோல் உணரச் செய்கிறது. தேசிய அடையாளம் முன்னிலைப்படுத்தப்படாத விளையாட்டுகளுக்கும், பிற விளையாட்டுகளுக்கும் இடையிலான வேறுபாடு, ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மிகவும் கடுமையான மற்றும் மன்னிக்க முடியாத விளையாட்டு சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த வகையான அடையாள உருவாக்கம் இப்போது தேசியங்களுக்கு மட்டும் வரம்பிடப்படவில்லை. மாநிலங்கள், நகரங்கள், கிளப்புகளும் வெறுப்பையும் கோபத்தையும் உருவாக்கும் உணர்வை வளர்த்துள்ளன.

விளையாட்டின் பங்கு என்ன?

இத்தகைய சூழ்நிலையில், நமது வாழ்க்கையில் விளையாட்டின் பங்கு என்ன? ஒரு தீவிர விளையாட்டு ரசிகனாக, எனது முடிவில் நான் சங்கடப்படுகிறேன். விளையாட்டு என்பது நம்பமுடியாத திறமையின் வெளிப்பாடு. விளையாடுவதும் பார்ப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது. எந்த விளையாட்டும் ஒரு தொழில். ஒவ்வொரு விளையாட்டும் துணைத் தொழில்களில் பல வேலைகளை உருவாக்குகிறது. மேலும் உள்ளூர், பிராந்திய, தேசியப் பொருளாதாரங்களில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். விளையாட்டைப் பயிற்சி செய்வது தனிநபர்களிடத்தில் சில அற்புதமான குணங்களை வளர்க்கிறது. ஆனால் இவை பெரும்பாலும் குறைவாகவே நடக்கின்றன. மிக உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்கள், அவர்கள் இயல்பு காரணமாகவே அதைச் செய்துள்ளனர். விளையாட்டு அவர்களுக்கு அந்த வாழ்க்கை முறையை கற்றுக் கொடுக்கவில்லை. விளையாட்டு நல்லொழுக்கத்துடன் சம்பந்தப்படவில்லை. ஒரு மட்டைப்பந்து வீரர் அல்லது ஒரு பந்துவீச்சாளர் வெளிப்படுத்தும் நேர்த்தி, அழகு, பாணி, நுட்பம் மற்றும் சக்தி ஆகியவை கிரிக்கெட்டின் நோக்கத்துடன் சிறிதும் சம்பந்தப்படவில்லை என்பதை நாம் நினைவில் வைத்திருந்தால் நாம் ஏமாற்றமடைய மாட்டோம்.

ஆடுகளத்தில் வித்தியாசமான சில மனிதர்கள்

ஆனால், விளையாட்டு வீரர்களாகவும் இருக்கும் சில விதிவிலக்கான மனிதர்கள், விளையாட்டு வெற்றியைவிட மேலானது என்ற நம்பிக்கையைத் தருகிறார்கள். 2021இல் டோக்கியோ ஒலிம்பிக்கில், கத்தாரின் உயரத் தாண்டல் வீரர் முதாஸ் பர்ஷிம், நேசிப்பதற்கும் வெற்றி பெறுவதற்கும் ஒரு வழியைக் காட்டினார். இத்தாலியின் ஜியான்மார்கோ டம்பெரியும் அவரும் 2.37 மீட்டரைத் தாண்டிய பிறகு, முதலிடத்தில் சமமாக இருந்தனர். அவர்கள் தொடர்ந்து மற்றவர் சறுக்குவதற்காகக் காத்திருக்கலாம். அவர்களில் ஒருவர் தனிப்பட்ட வெற்றியாளராகப் பதக்க மேடையில் நிற்கலாம். ஆனால் பர்ஷிம் நடுவரிடம், “நமக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைக்குமா?” என்று கேட்டார். அது சாத்தியம் என்று தெரியவந்தது.

பர்ஷிம் இப்படிச் சொன்னார்: “வேடிக்கை என்னவென்றால், நாங்கள் பார்த்துக்கொண்டதன் மூலமே ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டோம். நாங்கள் விளையாட்டு வீரர்கள்; போட்டித்தன்மை உடையவர்கள். அது நமது இயல்பு. அதைத்தான் நாங்கள் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். ஆனால், விளையாட்டின் உண்மையான காரணத்தையும், உண்மையான செய்தியையும் மறக்காமல் இருப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. இது விளையாட்டுதான். நாம் ஒன்றுபடவும் இந்த வகையான உறவை உருவாக்கவும் இது ஒரு கருவியாக உள்ளது… இது மனிதநேயம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, அமைதி ஆகியவற்றை உருவாக்க உதவுகிறது.”

டி.எம். கிருஷ்ணா இசைக்கலைஞர், பொது அறிவுஜீவி.

நன்றி: தி டெலிகிராஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share