நடிகை ராதிகாவின் தாயார் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகைகள் ராதிகா, நிரோஷாவின் தாயாரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியுமான கீதா ராதா நேற்று (செப்டம்பர் 21) இரவு 9.20 மணி அளவில் உடல் நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 86.
இதுகுறித்து நடிகை ராதிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், ” “மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், எனது தாயாருமான கீதா ராதா (86) 21.09.2025 மாலை மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி சடங்கு மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என கூறப்பட்டுள்ளது.
கீதாவின் மறைவுக்கு நடிகர்கள் பிரபு, நாசர் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்
கீதா ராதா மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், “நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.
