இந்திய கிரிக்கெட் அணியும்… அதன் அரைகுறை தேசபக்தியும்!

Published On:

| By Minnambalam Desk

Indian cricket team & its half hearted patriotism

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றது. ஆனால், விளையாட்டின் உன்னத உணர்வை நிலைநாட்டுவதில் அது தவறிவிட்டது.

த்ரியா குலாட்டி

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில், ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டி முழுவதும் இந்திய அணியின் கையே ஓங்கியிருந்த அந்த ஆட்டத்தில் எந்தச் சர்ச்சையும் இல்லை. அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளால் சர்ச்சை எழுந்தது.

ADVERTISEMENT

முற்றிலும் தேவையற்ற, செயற்கையான ஒரு நடவடிக்கையாக, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இதனால், பாகிஸ்தான் வீரர்கள் எல்லைக்கோட்டில் தர்மசங்கடத்துடன் காத்திருக்க வேண்டியிருந்தது.

கைகுலுக்காமல் சென்றது, பொதுமக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக நடந்த பாசாங்காகவே தோன்றியது. அது உறுதியான எதிர்ப்பாக இல்லை; வெறும் நாடகமாக இருந்தது. அது முதிர்ச்சியற்றதாகவும் விளையாட்டு உணர்வை அவமானப்படுத்துவதாகவும் இருந்தது.

ADVERTISEMENT

பாகிஸ்தான் தொடர்பில் ஏற்கெனவே மக்களின் கோபம் அதிகரித்திருந்தது. பஹல்காம் தாக்குதலும், அதனைத் தொடர்ந்து நடந்த படுகொலைகளுக்குப் பதிலடியாக தொடங்கப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையும் நடந்து சில மாதங்களே ஆன நிலையில், 2025 ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்றது, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுவது என்னும் பிசிசிஐயின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கிய பலரும், தேசிய உணர்வைவிடப் பணத்திற்கே வாரியம் முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்கள்.

ADVERTISEMENT

பிசிசிஐயின் செயலாளர் தேபஜித் சைகியா, ஆசியக் கோப்பை பன்னாட்டுப் போட்டி என்றும், இதனை ஒலிம்பிக் அல்லது ஃபிஃபா (FIFA) போட்டிகளுடன் ஒப்பிடலாம் என்றும் கூறி, வாரியத்தின் முடிவை நியாயப்படுத்திப் பேசினார்.

“நாங்கள் இந்த பன்னாட்டுப் போட்டியைப் புறக்கணிக்க முடியாது. அப்படிச் செய்தால், எதிர்காலத்தில் நாட்டில் எந்தவொரு பன்னாட்டுப் போட்டியையும் நடத்துவதற்கான எங்கள் முயற்சிகளுக்கு அது பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.

ஆனால், கிரிக்கெட் ரசிகர்கள் இதனை ஏற்கவில்லை. இதன் காரணமாக, பல வருடங்களில் முதல் முறையாக, இந்தியா – பாகிஸ்தான் போட்டி முழுமையாக விற்கப்படவில்லை. 25,000 இருக்கைகள் கொண்ட துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் 75 சதவீதம் மட்டுமே நிரம்பியிருந்தது. இது, கிரிக்கெட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றிற்கு ரசிகர்களின் வருகை குறைவாக இருந்ததைக் குறிக்கிறது.

களத்திற்கு வெளியே நடந்த நாடகம்

நேரடிப் போட்டிகளில் ‘ஃபாஸ்ட்-ஃபார்வர்டு’ வசதி இருந்திருந்தால், நான் டாஸில் இருந்து நேராகப் போட்டிக்குப் பிந்தைய விருது வழங்கும் விழாவுக்குத் தாவி இருப்பேன்.

உண்மையான சுவாரஸ்யம் களத்தில் இல்லை, ஏனெனில் போட்டி சப்பென்று இருந்தது. பாகிஸ்தான் அணி எந்தச் சவாலையும் முன்வைக்கவில்லை. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த பாகிஸ்தான் அணி பரிதாபமாக விளையாடியது. இந்திய அணி, பாகிஸ்தானை 127 ரன்களுக்குச் சுருட்டியது. பின்னர், அலட்டிக்கொள்ளாமல் 15.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தங்களின் பழமையான கிரிக்கெட் பாணியை வெளிப்படுத்தியதுடன், ஒரு ஓவர்கூட ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தவில்லை.

உப்புச்சப்பில்லாமல் முடிந்த இந்த ஆட்டத்திற்குப் பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோரின் செய்தியாளர் சந்திப்புகள், போட்டியில் இல்லாத விறுவிறுப்பைக் கொண்டிருந்தன.

டாஸ் போடும்போதும், சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்தார். சல்மான் ஆகா போட்டிக்குப் பிந்தைய விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. சூர்யகுமார் யாதவ் தனது செயல்களைப் பற்றிப் பேசும்போது, “வாழ்க்கையில் சில விஷயங்கள் விளையாட்டு உணர்வைவிட முக்கியமானவை” என்று கூறினார்.
தனது அணி ஏமாற்றமடைந்ததை ஹெசன் உறுதிப்படுத்தினார். சல்மான் ஆகா விழாவில் கலந்துகொள்ளாதது இந்திய அணியின் நடவடிக்கையின் நேரடி விளைவு என்று அவர் கூறினார்.

இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட முடிவெடுத்தது. ஆனால், அந்த முடிவில் உறுதியாக நிற்பதற்குப் பதிலாக, அவர்கள் அரைகுறை தேசபக்தியை வெளிப்படுத்தினார்கள்.
உண்மையான தேசபக்தி ஆழமாக இருந்திருந்தால், இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று போட்டியிலிருந்து விலகியிருக்கலாம்.

ஆனால், விளையாடுவது என்று முடிவு எடுத்த பிறகு, போட்டிக்கான நடைமுறைகளையும் விளையாட்டு உணர்வையும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பும் ஆட்டம் முடிந்த பின்பும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவதுதான் முறை. ஆட்டத்தைத் தவிர்க்காமல் கைகுலுக்குவதை மட்டும் தவிர்த்தது எப்போது நெக்கே எந்த அளவு தேசபக்தியைக் காட்டுவது என்று தேர்ந்தெடுத்துச் செய்வதைப் போன்றது. இது தேசபக்தியைத் தனது வசதிக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளும் செயல்பாடாகும். ஆடுவோம், ஆனால் கைகுலுக்க மாட்டோம் என்பது தேசபக்தியின் வெளிப்பாடு அல்ல.

இந்தியா போட்டியில் வென்றது. அதற்கு வாழ்த்துகள். ஆனால், விளையாட்டின் உன்னத உணர்வை நிலைநாட்டுவதில் அவர்கள் தவறிவிட்டார்கள்.

த்ரியா குலாட்டி கட்டுரையாளர், அரசியல் விமர்சகர்.

நன்றி: தி பிரிண்ட் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share