தமிழ்நாடு அரசியலையும் ஆடியோ வீடியோக்களையும் பிரிக்க முடியாது என்ற கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வெளியான அந்த ஆடியோ.
தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சி கருவாகி, உருவாகும் காலகட்டத்தில் இருந்தே விஜய்யோடு இருந்து அந்த கட்சியின் கொள்கை உருவாக்கங்கள், வழிகாட்டு தலைவர்கள் உள்ளிட்ட கோட்பாட்டு விஷயங்களில் பங்காற்றியவர் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி. விஜய்யின் தொடர்பு எல்லைக்குள் இருக்கும் அக்கட்சியின் ஒரு சிலரில் ஒருவராக இருக்கிறார் ஜான்.
இவர் அந்தக் கட்சியின் நிர்வாகிவுடனோ அல்லது வேறொரு பொதுவான நபருடனுனோ உரையாடுகிற சில நிமிட ஆடியோ தான் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிர்வலைகளை சில நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தியது.

நியூஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட அந்த ஆடியோவில்… தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சிக்குள் விஜயை விட தன்னை அதிகமாக முன்னிறுத்திக் கொள்கிறார் என்றும், கட்சியின் பல்வேறு விஷயங்களில் தவறான வழிநடத்தல்களை செய்கிறார். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் புஸ்ஸி ஆனந்த் விஜய்யை ஏமாற்றுகிறார் என்ற ரீதியில் ஜான் ஆரோக்கியசாமி மனம் திறந்து யாருடனோ பேசி இருக்கிறார்.
அந்த உரையாடல் ‘எப்படியோ’ வெளியே வந்திருக்கிறது. வெளியே வந்ததும் தமிழக வெற்றிக் கழகத்துக்குள் இன்னமும் புயல் ஓயவில்லை.
விஜய் மக்கள் இயக்கம் தொடங்கி தமிழக வெற்றிக் கழகம் என்ற இப்போதைய நிலை வரை விஜயோடு தொடர்ந்து பயணிப்பவர் புஸ்ஸி ஆனந்த்.
ஒரு காலத்தில் ரஜினிகாந்துக்கு எப்படி சத்யநாராயணன் இருந்தாரோ அதேபோல விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் செட்டில் ஆகிவிட்டார். விஜய் மக்கள் இயக்கத்தின் நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட அனைத்தையும் ஆனந்து தான் மேற்கொண்டு வந்திருக்கிறார்.
அவை எதிலுமே விஜய் தலையிட்டதே கிடையாது. மேடைக்கு வருவார், ரசிகர்களை சந்திப்பார் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார் சென்று விடுவார் என்பது தான் நடிகர் விஜய்க்கும் அவரது மக்கள் இயக்கத்துக்கும் இருந்த தொடர்பு, மற்ற அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொண்டவர் புஸ்ஸி ஆனந்த் தான்..
இதன் நீட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த பிறகு புஸ்ஸி ஆனந்தை பொதுச் செயலாளராக நியமித்தார் விஜய்.

ரசிகர் மன்றம் மக்கள் இயக்கம் என்ற நிலையை தாண்டி இப்போது அரசியல் கட்சியாக உருவெடுத்துவிட்ட நிலையில்.. விக்கிரவாண்டி மாநாட்டுக்காக மிகக் கடுமையாக இரவும் பகல் பாராமல் உழைத்தார் புஸ்ஸி ஆனந்த். ஆனால் அதில் பல விமர்சனங்களும் இருக்கின்றன. மாநாட்டுக்கான இடம் தேர்வு, போலீஸ் அனுமதி, ஏற்பாடுகள் போன்றவற்றில் புஸ்ஸி ஆனந்த் இன்னும் திறமையாக செயல்பட்டிருந்தால் மாநாடு தள்ளிப் போகவேண்டிய தேவையே இருந்திருக்காது என்ற விமர்சனங்களும் அவர் மீது உள்ளன.
இந்நிலையில் மாநாடு முடிந்து, மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுகிற விவகாரத்தில் தான் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய விளையாட்டை தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள்.. இதுவரை ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்தில் தன்னை ஒருவராகவே கருதிக் கொண்ட, காட்டிக்கொண்ட புஸ்ஸி ஆனந்த்.. தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் நியமிக்கப்பட இருக்கிற 100 மாவட்ட அமைப்புகளுக்கான செயலாளர்களில்… வெளியில் இருந்தும் பிற கட்சிகளில் இருந்தும் கணிசமானோரைக் கொண்டு வந்து அவர்களை மாவட்ட செயலாளர்கள் ஆக்கிட ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.
இது காலம் காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் உழைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு எல்லாம் லட்ச லட்சமாய் செலவு செய்த பழைய நிர்வாகிகளுக்கு கசந்து இருக்கிறது.
பழைய பால் புளிக்குது புதிய தேன் இனிக்குதா என்று அவர்களில் சிலர் புஸ்ஸி ஆனந்திடமே நேரடியாக கேட்டு இருக்கிறார்கள். புஸ்ஸி ஆனந்தோடு சின்ன பிரச்சனை ஏற்பட்டால் கூட அவர்களுக்கு இந்த கட்சியில் எந்த உயர்வும் இல்லை என்பது கடந்த சில மாதங்களில் உறுதியாகிவிட்டது.
இத்தகைய பின்னணியில் தான் இதையெல்லாம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையின் நிர்வாகிகளிலேயே சிலர் உணர்ந்து இதுபற்றி ஜான் ஆரோக்கியசாமி உடனும் ஆலோசித்து இருக்கிறார்கள்.
இந்த விஷயங்களை தான் தன்னிடம் பேசிய ஒருவரிடம் மனம் விட்டு புலம்பி இருக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி.
விஜய் என்ற சக்திக்கு மக்களிடம் இருக்கும் கரிஷ்மா… புஸ்ஸி ஆனந்த் போன்ற உள்ளே இருக்கும் சிலரது நடவடிக்கைகள் மூலம் குறைந்துவிடும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதுதான் ஜான் ஆரோக்கிய சாமியின் கவலை. அதனால்தான் இப்படியே போனால் 2% கூட வராது என்று வெளிப்படையாகவே வெடித்து இருக்கிறார்.
இந்த ஆடியோ வெளிவந்தது சில மணி நேரங்களுக்கு பிறகு தான் விஜய் கவனத்திற்கு சென்றிருக்கிறது. அப்போது பையனூரில் தனது கடைசி படத்தின் ஷூட்டிங்கில் இருந்திருக்கிறார் விஜய்.
தகவல் அறிந்து நேற்று காலை நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டுக்கு புஸ்ஸி ஆனந்தை அழைத்து பேசியிருக்கிறார் விஜய் என்று சொல்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் நம்மோடு நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு எந்த விதமான நம்பிக்கை குறைவும் ஏற்படக்கூடாது என்று புஸ்ஸி ஆனந்திடம் விஜய் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். அதே நேரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புஸ்ஸி ஆனந்தை விட்டே நடத்த சொல்லிவிட்டு ஷூட்டிங்கிற்காக நேற்று அவர் பையனூர் கிளம்பிவிட்டார்.
இன்றோடு அவர் நடிக்கிற படத்தின் தற்போதைய ஷெட்யூல் முடிகிறது. இதையடுத்து பொங்கலுக்குள் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி இருவரையும் அழைத்துப் பேசும் திட்டத்திலும் இருக்கிறார் விஜய் என்று சொல்கிறார்கள்.
விஜய் அடுத்து தமிழ்நாடு முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான கருத்தியல் ரீதியான பணிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக் கூடிய பிரத்யேகமான மிக நீண்ட கால பிரச்சினைகள், அதை திராவிட கட்சிகள் எப்படி தீர்க்காமல் விட்டிருக்கின்றன எனது குறித்த ஒரு ரிப்போர்ட்டை ஏற்கனவே ஜான் ஆரோக்கியசாமி தயாரித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் சுற்றுப் பயணத்துக்கான கள ரீதியான ஏற்பாடுகள், செயல்படுத்துதல் ஆகியவை புஸ்ஸி ஆனந்த்தின் வேலைகள்.
இப்படி தனக்கு முக்கியமான வேலைகளை செய்யும் இருவருக்கு இடையே ஏற்பட்டிருக்கிற இந்த பிரச்சனையை விஜய் அழைத்து பேசினால்தான் தீர்க்க முடியும்.
அரசியல் கட்சி என்ற இடத்துக்கு வந்து விட்ட நிலையில் இது போன்ற உட்கட்சி மோதல்களை எல்லாம் சந்தித்து சமரசம் பேசி தீர்வு கண்டு தான் ஆக வேண்டும். விஜய்யின் முதல் சமரசப் பேச்சுவார்த்தையே ஜான் – புஸ்ஸி ஆனந்த் இடையேதான் என்பதுதான் எதிர்பாராத ட்விஸ்ட்
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டாலின் vs எடப்பாடி : பொள்ளாச்சி விவகாரத்தில் யார் கூறியது உண்மை? சபாநாயகர் தீர்ப்பு!