தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவள்ளுவனை ஆளுநர் ரவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயர்படிப்பு மையத்தின் பேராசிரியராக இருந்த திருவள்ளுவனை, கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்தார். இதனையடுத்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 13-ஆவது துணை வேந்தராக 2021 டிசம்பர் 13-ஆம் தேதி திருவள்ளுவன் பொறுப்பேற்றார்.
வரும் டிசம்பர் 12-ஆம் தேதியுடன் இவரது மூன்று ஆண்டு பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் ரவி நேற்று (நவம்பர் 20) இவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் செயலாளர் கிர்லோஸ்குமார் அதற்கான உத்தரவு நகலை அனுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்த திருவள்ளுவனிடம் சஸ்பெண்ட் உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து தஞ்சாவூர் வந்தார். பின்னர் தனது குடியிருப்பில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சென்றார்.
கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார். ஒரு மாதம் கழித்து துணை வேந்தர் திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
2017 – 2018 காலகட்டத்தில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துணை பேராசிரியர்கள் என 40 காலிப்பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு இதுதொடர்பாக விசாரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழு நடத்திய விசாரணையில், பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக 2021-ஆம் ஆண்டு ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் ரவி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், சந்தேகத்திற்குரிய 40 பேராசிரியர், துணை பேராசிரியர்களுக்கு துணைவேந்தர் திருவள்ளுவன் நன்னடத்தை வழங்கி ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு எதிராக, குற்றச்சாட்டுக்குள்ளான 40 பேராசிரியர்களுக்கும் நன்னடத்தை வழங்கியதால் துணை வேந்தர் திருவள்ளுவனை ஆளுநர் ரவி சஸ்பெண்ட் செய்திருப்பதாக தகவல்கள் வருகிறது.
பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒருமாதத்திற்கு முன்பு துணை வேந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: திமுக ஐடி விங் ஆலோசனை கூட்டம் முதல் டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம் வரை!