ADVERTISEMENT

கூட்டணி ஆட்சி… ராஜாஜி முதல் கலைஞர் வரை… தம்பிதுரை சொன்ன ஹிஸ்டரி!

Published On:

| By Selvam

கடந்த வாரம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக, அதிமுக கூட்டணியை உறுதி செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார். previous alliance government Tamilnadu

இதுதொடர்பாக நேற்று (ஏப்ரல் 16) விளக்கமளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை, இனிமேலும் கூட்டணி ஆட்சி நடக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “தமிழகத்தில் இதுவரை ஏதாவது கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறதா? சுதந்திரம் அடைந்தபிறகு 1952-ஆம் ஆண்டு நடந்த மெட்ராஸ் மாகாண தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 155 சீட்களில் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 166 இடங்களை கைப்பற்றின.

ADVERTISEMENT

அப்போது பிரகாசம் என்பவர் முதல்வர் பதவிக்கு போட்டியிட முயற்சி செய்தார். அதனை அப்போது பிரதமராக இருந்த நேரு தடுத்தார். காமராஜர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல், லோக் சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றுவிட்டார்.

அந்தநேரத்தில், ராஜாஜி தான் மைனாரிட்டி காங்கிரஸ் ஆட்சியை அமைத்தார். அப்பொழுது கூட மற்ற கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை. ராமசாமி படையாட்சியினுடைய உழைப்பாளர் பொதுநலக் கட்சி உள்ளிட்ட சில கட்சி எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸில் சேர்த்து உறுப்பினராக்கி தான் ராஜாஜி ஆட்சி அமைத்தார்.

ADVERTISEMENT

பின்னர் 1957, 1962 என இரண்டு முறை காமராஜர் ஆட்சி அமைத்தார். அப்போதும் கூட்டணி ஆட்சி கிடையாது. 1967-ஆம் ஆண்டு அண்ணா, 1977-ல் எம்ஜிஆர் ஆகியோர் ஆட்சியமைத்தபோதும் கூட்டணி ஆட்சி கிடையாது.

ஆனால், 2006-ல் கூட்டணி ஆட்சிக்கான ஒரு சூழல் ஏற்பட்டது. திமுக 96 சீட்களில் தான் வெற்றி பெற்றது. அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது பிராணாப் முகர்ஜி தமிழகம் வந்து, காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று கலைஞரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்க மறுத்த கலைஞர், கூட்டணி ஆட்சி அமைத்தால் நான் முதல்வர் பதவி வகிக்க மாட்டேன் என்று சொன்னார். அதன்பிறகு தான் சோனியா காந்தி, கூட்டணி ஆட்சி வேண்டாம், கலைஞரே முதல்வராக இருக்கட்டும் என்று சொன்னார்.

இதேபோல தான் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனியாக தான் ஆட்சியமைப்பார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமியே தெளிவாக சொல்லிவிட்டார்” என்று தம்பிதுரை தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share