ADVERTISEMENT

டாஸ்மாக் வழக்கு : உச்ச, உயர் நீதிமன்றங்களில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

tasmac case arguement

டாஸ்மாக் வழக்கை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. tasmac case arguement

டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக  சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் மற்றும் அரசு சார்பில் மூன்று ரிட் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணையின் போது, டாஸ்மாக் பெண் ஊழியர்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சிறைபிடித்து வைத்திருந்தனர் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் நாங்கள் எந்த துன்புறுத்தலும் செய்யவில்லை என்று அமலாக்கத் துறை 47 பக்க பதில் மனுவை தாக்கல் செய்தது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. 

அதேசமயம் இன்று (ஏப்ரல் 8) சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  “உச்ச நீதிமன்றத்துக்கு செல்வதாக முன்னதாக சொல்லியிருந்தால் இந்த வழக்கை பட்டியலிட்டிருக்க மாட்டோம். சென்னை உயர் நீதிமன்றத்தை இழிவுப்படுத்துவதா? வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோருவது ஏன்?” என்று நீதிபதிகள்  எம்.எஸ். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் கண்டனம் தெரிவித்து வழக்கை மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர். 

ADVERTISEMENT

அதற்குள் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், தமிழக அரசு சார்பில் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்தசூழலில் மதியம் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் சார்பாக மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி ஆஜராகி வாதாடினார். 

“அமலாக்கத்துறை  சோதனையின் போது பெண் அதிகாரிகள் தொடர்ந்து 60 மணி நேரம் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும்தான் நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்” என்று கூறினார். 

மேலும் அவர், “நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தவறு நடந்துள்ளது என்று நம்புவதற்கான காரணங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை” என்று குறிப்பிட்டார். 

தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய செல்போனை பறிமுதல் செய்வது அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்று கூறிய மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் அத்துமீறும் போது நீதிமன்றம் தலையிடலாம்” எனவும் தெரிவித்தார்.

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ்,  “இந்த வழக்கை முதலில் விசாரித்த அமர்வு இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்து வாய்மொழியாக உத்தரவிட்டது. அந்த உத்தரவு இப்போதும் அமலில் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார் .

இதற்கு நீதிபதிகள், “அதுபோன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் உத்தரவில் எழுத்துப்பூர்வமாக இருப்பதை மட்டும் இந்த நீதிமன்றம் பின்பற்றும்” என தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என அமலாக்கத்துறை உறுதி அளித்ததாகவும் அதனடிப்படையிலேயே வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அமலாக்கத்துறை தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றக்கூடாது எனவும் கூறினார். 

இன்று வாதங்கள் நிறைவடையாததை தொடர்ந்து வழக்கு நாளை(ஏப்ரல் 9) ஒத்திவைக்கப்பட்டது. tasmac case arguement

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share