கட்டு கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் உள் விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அந்த வீட்டின் ஸ்டோர் ரூமில் கட்டு கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் இதை நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்து வருகிறார். அவரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. எனினும் இதுவரை அவருக்கு எந்த பணியும் ஒதுக்கவில்லை.
முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்த மூன்று நீதிபதிகள் கொண்ட உள் விசாரணைக் குழு, நீதிபதி வர்மாவின் வீட்டில் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தீ விபத்து ஏற்பட்டபோது கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதி செய்தது.
இதை எதிர்த்து யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அவர் தனது மனுவில் தன்னுடைய பெயரையோ, அடையாளத்தையோ குறிப்பிடவில்லை.
அதனால் உச்ச நீதிமன்றத்தின் வழக்கு பட்டியலில் இந்த வழக்கின் பெயர் XXX vs மத்திய அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யஷ்வந்த் வர்மா, தனது மனுவில் அடையாளத்தை வெளியிடாமல் இருக்க அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
பொதுவாக பாலியல் வழக்கிலோ அல்லது சிறுவர்கள் தொடர்பான வழக்கிலோ அவர்கள் அடையாளத்தை பயன்படுத்தகூடாது என்பதற்காக இதுபோன்ற முறை பின்பற்றப்படும். ஆனால் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் XXX என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வந்தபோது, “உள் விசாரணையில் பங்கேற்ற நீங்கள், இப்போது அதை எதிர்ப்பது ஏன்” என்று நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி ஆகியோர் அமர்வு கேள்வி எழுப்பியது.
அப்போது நீதிபதி வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “அரசியலமைப்பின் 124வது பிரிவின்படி மட்டுமே ஒரு நீதிபதியை நீக்க முடியும் என்றும், உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பொது விவாதங்கள் மூலம் நீக்க முடியாது என்றும் உள் விசாராணை குழு உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை” என்றும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து நீதிபதிகள், ”நீங்கள் ஏன் உள் விசாரணை குழு முன் ஆஜரானீர்கள்… விசாரணை முடிந்து அறிக்கை வெளியிடும் வரை ஏன் காத்திருந்தீர்கள்… குழு நியமிக்கப்பட்ட போதே அதை ஏன் எதிர்க்கவில்லை. நீங்கள் ஒரு அரசியலமைப்பு அதிகாரி என்று தெரியாதா? ” என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபலிடம் காட்டமாக கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து உள்ளக விசாரணை குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.