நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு மத்திய அரசு தரப்பில் முதல் முறையாக பதிலளிக்கப்பட்டுள்ளது. Judge Yashwant Verma issue
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்டது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உள்ளக விசாரணை குழு விசாரித்து வருகிறது. அதன்முடிவில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
டெல்லியில் நேற்று (மார்ச் 28) நடந்த டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2025ல் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரே பதிவு செய்யாத போது எப்படி பணத்தை பறிமுதல் செய்யமுடியும். தலைமை நீதிபதியின் அனுமதியுடன் மட்டுமே எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து நேற்று மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.
அதில், அரசமைப்புச் சட்டப்பிரிவு 222 உட்பிரிவு 1ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவியேற்கும் போது அவருக்கு எந்த பணியும் ஒதுக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Judge Yashwant Verma issue