ரஜினிக்கு பிடித்தவாறு கதையை தேடி கொண்டிருக்கிறோம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருந்த ‘தலைவர் 173’ படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி விலகினார்.
“எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்” காரணமாக இந்தப் படத்திலிருந்து விலகுவதாக கனத்த இதயத்துடன் முடிவெடுத்துள்ளேன் என்று தனது அறிக்கையில் சுந்தர் சி தெரிவித்திருந்தார்.
சுந்தர் சி விலகியதற்கான சரியான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், சமூக வலைத்தளங்களிலும் சினிமா வட்டாரத்திலும் பல்வேறு விதமாக பேசப்பட்டு வருகின்றன.
அதேசமயம் தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசன் இந்த விவகாரம் குறித்து என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
இந்தசூழலில் இன்று (நவம்பர் 15) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “நான் முதலீட்டாளர். என்னுடைய நட்சத்திரத்துக்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அதைத்தான் செய்திருக்கிறோம். அவருக்கு (ரஜினி) பிடிக்கும் வரை கதை கேட்டுக்கொண்டிருப்போம். புதியவர் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கதை பிடிக்க வேண்டும் அவ்வளவுதான். நானும் ரஜினியும் இணைந்து நடிப்பதற்கு இன்னொரு கதையை தேடிக்கொண்டிருக்கிறோம் எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று கூறினார்.
