தஞ்சையில் கரும்பு விதைக்கும் பணி மும்முரம்!

By admin

|

Published on 28 May 2022, 12:00 AM

மேட்டூர் அணை திறக்கப்பட்டு கல்லணையில் நீர்வரத்து தொடங்கியுள்ள நிலையில், தஞ்சை மாவட்டப் பகுதிகளில் பொங்கல் கரும்பு விதைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் கரும்பு விளைவிக்கப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களில் விளைவிக்கப்படும் கரும்புக்கு தனி மவுசு உண்டு. வளமான மண், காவிரி தண்ணீர், பாரம்பரியமான விவசாயம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாடு முழுவதும் இங்குள்ள கரும்புகளுக்கு கிராக்கி உள்ளது.
பொங்கல் கரும்பு பயிரிட சித்திரைப்பட்டம் உகந்தது என கருதப்படுகிறது. அதன்படி தற்போது தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை அருகே சூரக்கோட்டையில் உள்ள வயல்களை உழுது பண்படுத்தி, பாத்தி பிடித்து அதில் கரும்புகளை விதைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள கரும்பு விவசாயி ஒருவர், “சூரக்கோட்டையில் பல ஆண்டுகளாக கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். தற்போது விதை கரும்புகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளோம். முன்னதாக வயலை சாகுபடிக்கு தயார் செய்து, வைத்திருந்தோம். தற்போது வயல்களில் விதை கரும்புகளை நட்டு வருகிறோம். இதைத் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ப்போம். 15 நாட்களுக்கு ஒரு முறை பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரம் இடுவது, களை பறிப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும்.
மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தோகை பிரித்தல், கரும்பு சாயாமல் இருக்க மண் அணைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். இதனிடையே பூச்சி தாக்குதலைப் பொறுத்து மருந்து அடிக்க வேண்டும். விதை கன்றுகள் நட்டு, எட்டு மாதங்களில் பொங்கலையொட்டி கரும்பாக அறுவடை செய்வோம்.
இதனிடையே மழைக்காலங்களில் கரும்பு சாயாமல் இருக்க கயிறு கட்டுவோம். அதிலும் தாக்குப் பிடிக்காமல் பலத்த காற்று வீசினால், கரும்புகள் சாய்ந்து விடுகின்றன. எனவே மழைக்காலங்களில் பாதிக்கப்படும் கரும்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்படும் கரும்பை, அரசு நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

admin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel