ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதன் அளவைப் பொறுத்தது அல்ல. படத்தின் பட்ஜெட்டுக்காக செலவழிக்கப்பட்ட தொகையை விட எத்தனை மடங்கு அதிகமாக அது பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பெறுகிறது என்பதைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது.
அதனாலேயே, பெரிய பட்ஜெட் படங்களை விடச் சின்ன பட்ஜெட் படங்களின் ‘மெகா’ வெற்றி கொண்டாட்டத்தை நிகழ்த்துகிறது. அந்த வகையில் தமிழில் குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி, மெட்ராஸ் மேட்னி உள்ளிட்ட சில திரைப்படங்களின் வெற்றி பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது கன்னடப் படமான ‘சு ஃப்ரம் சோ’.
ஜே.பி.துமிநாட் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ராஜ் பி ஷெட்டி, ஷனீல் கௌதம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுமார் நான்கரை கோடியில் தயாரான இப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதியன்று வெளியானது. முதல் வாரத்திலேயே பெரியளவில் வசூலைப் பெற்று கன்னடத் திரையுலகை அதிர வைத்தது. பின்னர் மலையாளம், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த வாரங்களில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படமானது கூலி, வார் 2 வரவுக்குப் பிறகும் வசூலைக் குவித்து வருகிறது. தற்போது இப்படம் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கேஜிஎஃப் 2, காந்தாரா, கேஜிஎஃப், ஜேம்ஸ், சார்லி777, விக்ராந்த் ரோனாவுக்கு அடுத்தபடியாக 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்த படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது ‘சு ஃப்ரம் சோ’.
பெரிய நட்சத்திரப் பட்டாளம், பிரமாண்டமான செலவு, திகைக்க வைக்கும் கதைத் திருப்பங்கள் ஏதுமின்றி வட கர்நாடகாவின் கிராமப்புற பகுதியில் வாழ்கிற சாதாரண மனிதர்களின் வாழ்வியல், கலாசாரம், அவர்கள் மத்தியில் இருக்கிற மூட நம்பிக்கைகளைக் காட்டுவதாக அமைந்த இப்படத்தின் வெற்றி சிறிய பட்ஜெட்டில் தரமான படங்களை உருவாக்க வேண்டுமென்று மெனக்கெடுபவர்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது என்பதே உண்மை..!