பீகாரில் வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக லாலு பிரசாத்துக்கு சொந்தமான 25 இடங்களில் ஆகஸ்ட் 24ஆம் தேதி சி.பி.ஐ. அதிரடி சோதனைகள் நடத்திய நிலையில், கல்வீச்சு தாக்குதல் சம்பவமும் நடைபெற்றது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட 6 கட்சிகள் சேர்ந்த மகாபந்தன் கூட்டணியில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து பீகார் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
வேலை வாய்ப்பு மோசடி – சிபிஐ ரெய்டு!
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த காலை முதலே லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நடந்ததாகக் கூறப்படும் வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக 25க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2004 – 2009ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே மந்திரியாக இருந்தவர் ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்.
அப்போது அவர் ரயில்வே துறையில் வேலை வழங்குவதற்காக தனது குடும்பத்தினர் பெயரில் பலரிடம் நிலங்களை லஞ்சமாக பெற்றார் என ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவம் நடந்து 13 ஆண்டுகளான நிலையில், லாலு பிரசாத், மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா பாரதி உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
மேலும் டெல்லி, பாட்னா, குருகிராம் என நாடு முழுவதும் லாலு பிரசாத் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 25 இடங்களிலும் சி.பி.ஐ. அதிரடி சோதனைகள் நடத்தியது.
கைப்பற்றிய ஆவணங்கள்!
பீகாரில் உள்ள ஆர்ஜேடி தலைவர்களின் வீடுகளில் சிபிஐ நடத்திய சோதனையில் 200க்கும் மேற்பட்ட விற்பனைப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னதாக இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஐந்து விற்பனைப் பத்திரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது 200 விற்பனைப் பத்திரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் போன்றவை கிடைத்துள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ மீது கல்வீச்சு தாக்குதல் போராட்டம்!
கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் நான்கு மூத்த ஆர்ஜேடி தலைவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதன்படி பீகாரின் மதுபானியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்பி ஃபயாஸ் அகமது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்புக்கு நின்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் சிபிஐ மற்றும் சிஆர்பிஎஃப் கான்வாய் கண்ணாடிகள் உடைந்தது. தொடர்ந்து ஃபயாஸ் அகமது வீட்டிற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 3 ஜவான்கள் காயமடைந்தனர். இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த எம்பி ஃபயாஸ் அகமது தனது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் நடந்த தாக்குதல்!
தற்போது பீகாரில் சிபிஐ மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், 2013ம் ஆண்டு தமிழகத்திலும் அதே போன்று நடந்துள்ளது.
வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் உண்டு. இந்த வரிச் சலுகையை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன.
இப்படித்தான் அப்போது மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி பயன்படுத்திய ரூ.20 கோடி மதிப்பிலான ஹம்மர் ரக வெளிநாட்டு காரும் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து 2010ம் ஆண்டு வருமான வரித்துறை அளித்த நோட்டீஸ்க்கு ஸ்டாலின் தரப்பு பதில் அளித்தது.

ஆனாலும் 2013ம் ஆண்டு கார் இறக்குமதி தொடர்பாக மு.க. ஸ்டாலின் வீட்டிலும், அவரது நண்பர் ராஜா சங்கர் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது.
ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர், ஈரோடு, போடி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் சென்னை செனடாப் ரோட்டில் உள்ள ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
நிதிஷ்குமார் அரசு மீது வாக்கெடுப்பு: கூட்டணி கட்சியினர் வீடுகளில் ரெய்டு!









