தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வைகை, மேட்டூர், பவானி அணைகள் நிரம்பி உள்ளன. இதன் காரணமாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணை நிலவரம்
மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியதால் இன்று அதிகாலை வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்ட வைகை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நிலவரம்
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர் அளவு மணிக்கு 30,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 7,700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை வரலாறில் ஒரே ஆண்டில் அணையின் நீர் மட்டம் 7ஆவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை நேற்று(அக். 20) எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2006ஆம் ஆண்டு 6 முறை மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
பவானி சாகர் அணை நிலவரம்
ஈரோடு, கரூர் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி சாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பவானி சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் இன்று காலை பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 நீர்மட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் அணைக்கு 9,300 கன அடி நீர் அதிகரித்து வந்து கொண்டிருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி அந்த நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படுகிறது.
இதனால் பவானி ஆற்றில் மக்கள் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு பவானி சாகர் அணை இரண்டாவது முறையாக முழுகொள்ளளவை எட்டி உள்ளது.
மேலும் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கொடிவேரி தடுப்பணையிலும் 3 ஆவது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுவதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 8-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
