தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அப்பால் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (அக்டோபர் 21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நாளை (அக்டோபர் 22) சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று (அக்டோபர் 21) தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, அடுத்த 36 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு – மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
