தமிழகத்தில் சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ந் தேதி தொடங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்தது வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெருமழை கொட்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் அணைகள் நிரம்பி வழிகின்றன.
இதனிடையே சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும்.
மேலும் வங்க கடலில் இன்று புயல் சின்னமான, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, 3 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ராமநாதபுரம் முதல் புதுச்சேரி வரையிலான கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே கொட்டி வரும் மழை மேலும் வலுவடையும்.
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
