தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் (ED Raid) சோதனை நடத்தியது அமைச்சர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், தமிழக அமைச்சரவை கூட்டத்தை 2 நாட்களுக்கு முன்னர் அடுத்தடுத்து கூட்டி இருந்தார். முதல்வர் ஸ்டாலின் வரும் 30-ந் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். முதல்வர் ஸ்டாலினின் இந்த வெளிநாட்டு பயணம் 20 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீட்டிக்கப்படவும் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் வெளிநாடு பயணத்துக்கு முன்னதாக திமுக மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் பேசும் போது, பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது பற்றி தினமும் செய்திகள் வருது.. அதே மாதிரி நமக்கும் நெருக்கடி வரும்.. நம்மை வீழ்த்தனும் என நினைக்கிறதால இதுமாதிரி செய்வாங்க.. அதனால வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது ரொம்ப கவனமாக நாம செயல்படனும்.. நம்முடைய பாக முகவர்களுக்கு கூடுதலாக உரிய பயிற்சி தரனும் என விவரித்திருந்தார் ஸ்டாலின். அப்போது தாம் வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருப்பது குறித்தும் மா.செ.க்கள் கூட்டத்தில் தெரிவித்தார் ஸ்டாலின்.
இதன் பின்னர் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தையும் நடத்தினார் ஸ்டாலின். அதில், தூய்மைப் பணியாளர்களுக்கான புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திலும் வெளிநாடு பயணம் பற்றி முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த கூட்டங்களைத் தொடர்ந்து, சில சீனியர் அமைச்சர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” எல்லோரும் கவனமாக இருக்கனும்.. ஈடி, ஐடி ரெய்டுகளை சந்திக்கும் நிலை வரலாம்னு தகவல் வந்துருக்கு.. நான் வெளிநாட்டுக்கு போறதுக்கு முன்னால அல்லது வெளிநாட்டுல இருக்கும் போது இந்த மாதிரி ரெய்டுகள் நடக்கலாம்.. நம்முடைய எலக்ஷன் வேலைகளை முடக்கி வைக்கனும் என்பதற்காக இதுமாதிரி ரெய்டு வருவாங்க” என அழுத்தம் திருத்தமாக எச்சரித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த எச்சரிக்கையின் ஈரம் காய்வதற்குள் என்பதைப் போல அடுத்த 3 நாட்களிலேயே ஆகஸ்ட் 16-ந் தேதி இன்று ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தி இருக்கின்றனர். ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ, மகள் இந்திரா ஆகியோரது திண்டுக்கல், மதுரை வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுகவில் சீனியர். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த காலங்களில் பத்திரப் பதிவு உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தார். இந்த முறை ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்படவில்லையே என்ற் ஆதங்கம் அவரது ஆதரவாளர்களிடையே தற்போதும் இருந்து வருகிறது.
அத்துடன், ஐ.பெரியசாமியின் உடல் நலனும் ஒத்துழைக்காததால் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல்தான் இருந்து வருகிறார். இதனாலேயே அண்மையில் திமுகவின் மண்டலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட போது ஐ.பெரியசாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதில் அதே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சக்கரபாணி மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஐ.பெரியசாமி போட்டியிடமாட்டார்; அவரது கோட்டையான திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மகள் இந்திராவை போட்டியிட வைக்க விரும்புகிறார் எனவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு ஐ.பெரியசாமி, ” நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன்.. நான் 2026 தேர்தலிலும் போட்டியிடுவேன்” என விளக்கமும் கொடுத்திருந்தார்.
இப்படி ‘தீவிர அரசியலில்’ இருந்து மெல்ல ஒதுங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது, சீனியர் அமைச்சர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
“நம்மை நோக்கியும் அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் வரும் என்பதைத்தான் ஐ.பெரியசாமி வீட்டு ரெய்டு காட்டுகிறது.. ஒதுங்கி இருக்கும் ஐ.பி.க்கே ரெய்டு எனில் ஆக்டிவ்வாக இருக்கும் நமக்கு கண்டிப்பாக ரெய்டு உண்டு” என தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சீனியர் அமைச்சர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.