தமிழகத்தில் நடைபெற உள்ள 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 29) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
திமுகவின் தேர்தல் அறிக்கைதான் எப்போதும் தேர்தலின் ஹீரோ. இப்போது திராவிட மாடல் 2.0-விற்கான இந்த அறிக்கை சூப்பர் ஸ்டாராகக் களம் இறங்கியிருக்கிறது என்றார்.
பின்னர் காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். புதுமைப் பெண் திட்ட உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும். உயர்கல்வி மாணவர்கள் 35 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும். இல்லத்தரசிகள் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க ரூ.8,000 வழங்கும் இல்லத்தரசிகள் கூப்பன் திட்டம் உள்ளிட்ட 50 திட்டங்களை அவர் வாசித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்படும் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். “ஏற்கனவே நிதிப் பற்றாக்குறை இருந்தபோது மகளிருக்கு ரூ.1,000, பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவற்றை அறிவித்தபோது இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று பலர் சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். இப்போதும் சந்தேகத்தின் அடிப்படையில் எப்படி நிறைவேற்ற முடியும் என சிலர் கேட்கலாம். நிச்சயமாக நிறைவேற்றுவோம். பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலம் என்று பெயர் எடுத்திருக்கிறோம். கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூ.1,000, லேப்டாப், காலை உணவுத் திட்டம் இப்படி சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதனால் இது நாங்கள் சொன்ன திட்டம். இதை நிச்சயமாக நிறைவேற்றுவோம். சந்தேகம் வேண்டாம்,” என்று தெரிவித்தார்.
மகளிருக்கு கூப்பனாக வழங்குவது குறித்த கேள்விக்கு, “மகளிர் விரும்பி என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொள்வார்கள். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், 2021 தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையை ஹீரோ என்று சொன்னார்கள். இப்போது ஹீரோ மட்டுமல்ல, ஹீரோயினும் திமுக தேர்தல் அறிக்கைதான்,” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
