திமுக கூட்டணியில் விவாதம் இருக்கலாம், விரிசல் இல்லை: எடப்பாடிக்கு ஸ்டாலின் பதில்!

Published On:

| By Minnambalam Login1

stalin reply to palanisami

திமுக கூட்டணி உடையப்போகிறது என்று எடப்பாடி பழனிசாமி பொறாமையில் பேசுகிறார் என்று திமுக முன்னாள் எம்எல்ஏ வேணுவின் இல்லத் திருமண விழாவில் இன்று(அக்டோபர் 23) கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் கொங்கணாபுரத்தில் நேற்று (அக்டோபர் 22) நடந்த அதிமுகவின் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டத்திற்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் “திமுக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மேலும் “அதிமுக ஆட்சியில், சென்னையில் கனமழை பெய்த போது தேங்கிய வெள்ள நீர் வேகமாக வடிந்தது மற்றும் அகற்றப்பட்டது. ஆனால் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழக அரசாங்கத்தால் சிறு மழையையே தாக்குப்பிடிக்க முடியவில்லை.” என்று தமிழக அரசை விமர்சித்திருந்தார்

இந்த நிலையில்தான் இன்று(அக்டோபர் 23) காலை சென்னையில் திமுக முன்னாள் எம்எல்ஏ வேணுவின் இல்லத் திருமண விழாவை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

மண விழாவில் பேசிய ஸ்டாலின்,  “வாக்குறுதி தந்த திட்டங்கள் மட்டும் அல்லாமல் வாக்குறுதி தராத திட்டங்களையும் தமிழக அரசு செய்து வருகிறது.

ஆக மக்களால் போற்றப்படுகிற கட்சியாக திமுக திகழ்கிறது. ஆனால் மக்களால் ஓரங்கட்டப்பட்ட, செல்லாக்காசாகியுள்ள எடப்பாடி பழனிசாமி,  திமுக செய்து வரும் சாதனைகளைத் தாங்க முடியாமல், பொறாமையில் திமுக அரசு சரிந்துகொண்டு இருக்கிறது என்று தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் திமுக கூட்டணி உடையப்போகிறது என்று சொல்லியிருக்கிறார். இதுவரை அவர் கற்பனையில்தான் மிதந்துகொண்டு இருந்தார் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். இப்போது ஜோசியராகவே மாறியிருக்கிறார். எப்போது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்குத் தெரியவில்லை. விரக்தியின் எல்லைக்கே அவர் சென்று விட்டார்.

அவரிடம் நான் சொல்லிக்கொள்ள நினைப்பது, பதவிக்காகவோ, தேர்தலுக்காகவோ திமுக கூட்டணி உருவாக்கப்படவில்லை, மாறாக எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி.

எங்கள் கூட்டணிக்குள்ளே விவாதங்கள் நடக்கலாம். ஆனால் அதனால் விரிசல் ஏற்படாது. சில தினங்களுக்கு முன் சென்னையில் பெய்த கனமழையின் போது நான், துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மக்களைச் சந்தித்து, அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தோம். ஆனால் மழை வந்தவுடன் சேலத்தில் பதுங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி“ என்று  கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஸ்டாலின்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

அறப்போர் மீது மானநஷ்ட வழக்கு : அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!

”திண்டிவனத்தில் விரைவு ரயில்களை நிறுத்த வேண்டும்”: எம்பி ரவிக்குமார் கோரிக்கை!

அமெரிக்காவில் பெண்கள் ஏன் அதிபராக முடிவதில்லை… முடிவை மாற்றி எழுதுவாரா கமலா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share