ADVERTISEMENT

‘வாக்கு திருட்டு’ : தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் 7 கேள்விகள்!

Published On:

| By Kavi

Stalin 7 questions to the Election Commission

தேர்தல் ஆணையம் ஆதாரை ஏற்க மறுப்பது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பீகாரில் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்கு திருட்டு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக இந்தியா கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால் அவர்களை செல்ல விடாமல் போலீசார் தடுத்தி நிறுத்தினர்.

இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ADVERTISEMENT

அப்போது ராகுல் காந்தி ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். இதுதொடர்பாக அவர் 7 நாட்களுக்குள் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் மன்னிப்பு கேட்க வேண்டும். சூரியன் கிழக்கில் தான் உதிக்கும் ஒருவர் சொல்கிறார் என்பதற்கு வேறு திசையில் உதிக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்துக்கு கேள்விகளை அடுக்கியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 18) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன.

1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?

2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?

3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?

4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?

5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?

6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?

7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் – வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share