ஆயுத பூஜை, தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
நாடு முழுவதும் அக்டோபர் 1, 2ஆம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி கொண்டாடப்படுகிறது. அதேபோன்று தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி ஆண்டுதோறும் சென்னை உள்ளிட்ட வெளியூரில் இருக்கும் பொதுமக்கள், அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் ஆயுத பூஜை, தீபாவளிக்கான சிறப்பு ரயில்கள் பட்டியலை தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் (06012) செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், கும்பக்கோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியாக இயக்கப்பட உள்ளது. எதிர் வழித்தடத்தில் இந்த சிறப்பு ரயில் (06011), தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 27 வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

அதேபோன்று நாகர்கோவிலில் இருந்து சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் (06054) செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 28 வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது. எதிர் வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் இடையே அக்டோபர் 1 முதல் அக்டோபர் 29 வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் (06053) இயக்கப்படும்.

தூத்துக்குடி – எழும்பூர் சிறப்பு ரயில் (06018) செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 23 வரை அனைத்து திங்கள்கிழமைகளிலும் இயக்கப்படும். இதே ரயில் எதிர்திசையில் எழும்பூர் – தூத்துக்குடி இடையே இடையே அக்டோபர் 1 முதல் அக்டோபர் 29 வரை செவ்வாய்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 17) காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல்லை – எழும்பூர், எழும்பூர் – நெல்லை வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 312 இடங்கள் கூடுதலாக பயணிகளுக்கு கிடைக்கும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.