திருச்சி சமயபுரம் அருகே 10 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பவாரியா கொள்ளையர்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டையில் ஆர்கே ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது. இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல நகைக்கடைகளுக்கு ஆபரண தங்கத்தை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி சென்னையில் இருந்து கடை மேலாளர் பிரதீப் ஷாட் மூன்று பேருடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நகை கடைக்கு நகைகளை விற்பனை செய்ய காரில் வந்துள்ளார். நகைகளை விற்பனை செய்துவிட்டு செப்டம்பர் 13ம் தேதி மீதி இருந்த 10 கிலோ தங்கத்துடன் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் சமயபுரம் அருகே சிறுகனூர் சாலையில் கார் சென்ற போது இயற்கை உபாதையை கழிக்க காரை நிறுத்தி விட்டு இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது 4 அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்தவர்களின் முகங்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு கார் கண்ணாடியை உடைத்து 2 பைகளில் இருந்த 12 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் மேலாளர் புகார் அளித்தார். இதையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை தொடங்கியது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் சோதனையை தொடர்ந்தனர்.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ராஜஸ்தானை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
