‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்’ நாடு முழுவதும் அமல்- உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

Published On:

| By Mathi

Election Commission Supreme Court

பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Election Commission Supreme Court

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் திடீரென ‘ வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்’ என்ற நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருப்பது சர்ச்சையாகிவிட்டது.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டி உள்ளனர். தற்போது பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் திடீரென ‘சிறப்பு திருத்தம்’ என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் கை வைப்பதால் எதிர்க்கட்சிகள் பெரும் சந்தேகங்களை எழுப்பி உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இருக்கின்றன.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில், இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து வரும் கருத்துகள், அதிர்ச்சியளிக்கக் கூடியவையாகவே இருக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

உச்சநீதிமன்றத்தில் இன்று ஜூலை 10-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, ஆதார் அட்டை என்பது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது அத்துடன் குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகமே இறுதி முடிவு எடுக்கும் என்றும் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனால் அதிர்ந்து போன உச்சநீதிமன்றம், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்கிற முடிவு எப்போது எடுக்கப்பட்டது? அப்படியானால் பீகார் தேர்தல் காலத்துக்கு முன்னரே இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாமே? தேர்தல் நடைமுறைகளோடு ஏன் இப்படி குழப்ப வேண்டும்? என்று கேட்டது. அத்துடன் இது தொடர்பாக விரிவான விளக்கத்தை தேர்தல் ஆணையம் தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்போது, பீகாரைப் போல வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது நாடு முழுவதுமே மேற்கொள்ளப்பட இருக்கிறது. தேர்தலுடன் இதனை தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது என்றது இந்திய தேர்தல் ஆணையம்.

ஆனால் ஒருவர் இந்திய குடிமகனா? இல்லையா? என்பதை இந்திய தேர்தல் ஆணையம் எப்படி முடிவு செய்யும்? மத்திய அரசுதானே முடிவெடுக்க வேண்டும் என மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சுட்டிக்காட்டினார்.

இந்த வாதங்களைத் தொடர்ந்து,

  • வாக்காளர் பட்டியல் சேர்ப்புக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்
  • பீகார் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆகஸ்ட் 1-ந் தேதிக்கு முன்பாக வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share