தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று (ஜூலை 12) காலை தொடங்கி நடந்து வரும் நிலையில் தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் தெரிவித்துள்ளார். when tnpsc group 4 result will be release?
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், குறுக்கெழுத்து தட்டச்சர், வன காப்பாளர், வன காவலர் உள்ளிட்ட குரூப் 4 பணிகளில் 13 ஆயிரத்து 935 காலிப் பணியிடங்கள் இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
10ம் வகுப்பு தகுதி உள்ளவர்களும் எழுதக்கூடிய இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 ஆண்கள், 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பெண்கள் மற்றும் 117 திருநங்கைகள் என மொத்தம் 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் இன்று இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை. குரூப் 4 வினாத்தாள் விடைத்தாள் அனைத்தும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.
